வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் ரூ.2 கோடி நன்கொடையாக வழங்கினார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30ம் தேதி நள்ளிரவு மற்றும் அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை, அட்டமலை, பூஞ்சிரித்தோடு உள்ளிட்ட கிராமங்கள் உருக்குலைந்து போயுள்ளன. சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்த இடம் தெரியாத அளவிற்கு மண்ணில் புதைந்துவிட்டன.
அந்த வீடுகளில் இருந்த மக்கள் மண்ணில் புதைந்துள்ளதோடு, பலர் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டன. ராணுவம், தேசிய பேரிட மீட்பு படையினர், கேரள மீட்பு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், தன்னார்வலர்கள் என 300 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலச்சரிவில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்ற நிலையில், 9வது நாளாக மீட்பு பணிகள் நீடித்து வருகின்றன. முன்னதாக நிவாரணப் பணிகளுக்காக, நிதியுதவி அளிக்குமாறு அம்மாநில முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். இதையொட்டி திரைப்பிரபலங்கள் , அரசியல் கட்சிகள் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்தவகையில் தமிழகத்தில் இருந்து முதல் ஆளாக நடிகர் விக்ரம் ரூ. 20 லட்சம் வழங்கியிருந்தார். அதேபோல் நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி இணைந்து ரூ.50 லட்சமும், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இணைந்து ரூ.20 லட்சமும் வழங்கியிருந்தனர்.
இதேபோல் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ரூ. 3கோடியும், ஃபகத்பாசில் தம்பதி ரூ 25 லட்சமும் நிதியுதவி அளித்தனர். இவர்களைத் தொடர்ந்து நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இணைந்து ரூ. 1 கோடியும், நடிகர் அல்லு அர்ஜுன் ரூ. 25 லட்சம் வழங்கினர்.
இந்த வரிசையில் தற்போது நடிகர் பிரபாஸ் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணம் வழங்கியிருக்கிறார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, நடிகர் பிரபாஸ் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2கோடியை அவர் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.