பவ்நகர்,
குஜராத்தின் பவ்நகருக்கு பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைப்பதற்காக இன்று புறப்பட்டார்.
அவர் வாகன பேரணி நடத்தியபோது, தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன்பின்னர், சமுத்ரோ சே சம்ரிதி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரூ.34,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், திட்டங்களை தொடங்கி வைத்தும் உரையாற்றினார்.
அவர் பேசும்போது, உலகில் நமக்கு பெரிய எதிரி யாரும் கிடையாது. நாம் பிற நாடுகளை சார்ந்து இருப்பதே நம்முடைய பெரிய எதிரி. இந்தியாவின் இந்த எதிரியை, சார்ந்திருக்கும் இந்த எதிரியை நாம் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும்.
இதனை நாம் எப்போதும் வலியுறுத்த வேண்டும் என பேசியுள்ளார். அடுத்த தலைமுறைக்கான நிலையான மற்றும் வளம் வாய்ந்த எதிர்காலம் உறுதி செய்யப்படுவதற்கு, வெளிநாடுகளை பெரிய அளவில் நாம் சார்ந்திருக்க கூடாது என்று அப்போது அவர் வலியுறுத்தினார்.
உலகின் மிக பெரிய மக்கள் தொகை கொண்ட நாம் ஆத்மநிர்பார் (சுயசார்பு) ஆக மாற வேண்டும். 140 கோடி மக்களின் வேதனைகளுக்கான ஒரேயொரு மருந்து, சுயசார்பு இந்தியா என்பதே ஆகும் என கூறினார்.
சிப்புகள் (அரை கடத்திகள்) முதல் ஷிப்புகள் (கப்பல்கள்) வரை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட வேண்டும். உலக அளவில் பொருட்களை கொண்டு செல்ல ஆண்டுதோறும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு ரூ.6 லட்சம் கோடியை இந்தியா கொடுத்து வருகிறது.
இது ஏறக்குறைய ராணுவ பட்ஜெட்டுக்கு சமம் என்றும் கூறினார். அதனால், பெரிய கப்பல்களை நாட்டின் உட்கட்டமைப்புகளாக கொண்டு, இந்திய கடல்வழி துறையை பலப்படுத்தும் வரலாற்று முடிவை தன்னுடைய அரசு எடுத்துள்ளது என்றும் அவர் பேசியுள்ளார்.
இந்தியாவிடம் இளைஞர் சக்திக்கு குறைவில்லை. ஆனால், சுதந்திரத்திற்கு பின்னர், இந்தியாவின் அனைத்து சக்திகளையும் காங்கிரஸ் புறந்தள்ளி விட்டது.
கோடிக்கணக்கான மதிப்பில் ஊழல்கள் நடந்துள்ளன. காங்கிரஸ் அரசின் கொள்கைகளால், நாட்டின் இளைஞர்களுக்கு பெரிய அளவில் தீங்கு ஏற்பட்டு உள்ளது என்றும் அவர் பேசியுள்ளார்.