”எமன் மீண்டும் உயிர் பெற்ற தலம்”!!

மார்க்கண்டேயன் உயிரை பறித்து செல்லமுடிவு செய்த எமன் துணிச்சலாக திருக்கடையூர் தலத்துக்குள் நுழைந்தான்.

இதை கண்டதும் மார்க்கண்டேயர் ஓடிச் சென்று சிவலிங்கத்தை கட்டிப் பிடித்துக் கொண்டார் என்றாலும் எமன் பாசக்கயிறை வீசினான்.

அந்த கயிறு சிவலிங்கம் மீதும் பட்டது. அவ்வளவு தான்….. ஆவேசம் அடைந்த ஈசன் லிங்கத்தை பிளந்தபடி வெளியில் வந்தார். தன் இடது காலால் எமனை ஓங்கி உதைத்தார்.

ஒரே ஒரு உதைதான். ஈசன் உதைத்தால் யாரால் தாங்கிக் கொள்ள முடியும்? அந்த இடத்திலேயே எமன் உயிர் பிரிந்தது.

எமன் செத்துப் போனால் என்ன ஆகும்? அதன்பிறகு உலகில் யாருமே மரணம் அடைய வில்லை.

இதனால் உலகில் மக்கள் தொகை அதிகரித்தது. இதையடுத்து பாரம் தாங்காமல் பூமா தேவி அவதிப்பட்டாள்.

ஒரு கட்டத்தில் பூமாதேவியால் பொறுக்க முடியவில்லை. எனவே அவள் சிவபெருமானை நோக்கி பிரார்த்தனை செய்தாள்.

மக்கள் தொகை பெருக்கத்தால் உலகம் தள்ளாடுவதை கண்டு மகா விஷ்ணுவும், பிரம்மாவும் சிவபெருமானை அணுகி எமனுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும்படி வேண்டினார்கள்.

இதனால் எமன் மீது ஈசன் இரக்கம் கொண்டார்.

எமனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து, ஆசி வழங்கி அருளினார். இந்த அற்புதமும் இங்கு தான் நிகழ்ந்தது.

அதை சுட்டிக் காட்டும் வகையில் திருக்கடையூர் தலத்தில் எமதர்ம ராஜாவும் எழுந்தருயுள்ளார். கால சம்ஹார மூர்த்திக்கு நேர் எதிரில் பிரகாரத்தில் எமதர்ம ராஜாவை காணலாம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *