திருப்பரங்குன்றம்:
பங்குனி உத்திரம் என்பது தமிழ் கடவுளாகிய முருகப் பெருமானுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் விரதம் மேற்கொண்டு வழிபாடு நடத்தினால் வாழ்க்கை சிறக்கும் என்பதுடன், திருமண தடைகள் அகலும் என்பதும் ஐதீகம்.
அந்த வகையில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டது. அப்போது முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தற்போது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் சன்னதி உள்ளிட்ட இடங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டு அங்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.

எனவே மூலஸ்தானத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யாமல் அதற்கு பதிலாக சண்முகர் சன்னதியில் அத்தி மரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவர்களை பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு உற்சவர் சன்ன தியில் சண்முகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதைத் தொடர்ந்து காலை ஐந்து மணி முதல் வழிபாட்டிற்காக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். தொடர்ந்து அவர்கள் வேண்டுதலுக்காவும், வேண்டுதல்கள் நிறை வேறியமைக்காகவும் காவடி சுமந்தும், பால்குடம் ஏந்தியும் அவர்கள் கொண்டு வந்த பால் மூலம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
சுவாமிமலை
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் அமைந்துள்ள முருகப்பெருமானின் 4-ம் படை வீடான சுவாமிநாத சுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் குவிந்தனர்.

முன்னதாக அதிகாலை மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுவாமிநாத சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.
மேலும், பங்குனி உத்திரத்தன்று முருகனை காண அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தீபம் ஏற்றியும், அர்ச்சனை செய்தும் மனமுருகி முருகப்பெருமானை வழிபட்டனர்.
வயலூர் முருகன்
குமார வயலூர் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பால்குடம், காவடி, அழகு குத்தி வந்தூம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று இரவு 9 மணியளவில் முருகப்பெ ருமா ன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதிவுலா நடைபெறுகிறது.
நாளை (சனிக்கிழமை) உபய அபிஷேகங்களும், 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் வள்ளி தினைப்புனம் காத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
14-ந் தேதி வேலன் வேடனாக விருத்தனாக வருதல் மற்றும் யானை விரட்ட நிகழ்ச்சி பின் முருகப்பெருமானாக காட்சியளித்தலும் நடைபெறுகிறது.
15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் மிதுன லக்னத்தில் ஸ்ரீ வள்ளி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்காக கடந்த இரண்டு வருடங்களாக பாலாயம் செய்யப்பட்டு மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெறாதால். இந்த பங்குனி உத்திரத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.