சென்னை:
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தொழிற்சங்கங்களை ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் 4-ம் ஆண்டு பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் 4-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், 5-ம் ஆண்டு பேரவை தொடக்க விழா மற்றும் பேரவையின் புதிய அலுவலக திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
தொழிற்சங்கப் பேரவையின் புதிய அலுவலகத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் திறந்து வைத்தார். பின்னர் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அவரது ஆலோசனையின்படி 234 தொகுதிகளிலும் விரைந்து தொழிற்சங்கங்களை ஏற்படுத்துதல், அரசு மற்றும் தனியார் துறைகளில், துறை வாரியாக தொழிற்சங்கங்களை தொடங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களை, தொழில்வாரியாக ஒருங்கிணைத்து தொழிற்சங்கங்களை ஏற்படுத்துதல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உள்ள உரிமைகள், சலுகைகளை பெற்று தருதல், இந்தியாவின் மிகப்பெரிய ரயில்பெட்டி உற்பத்தித் தொழிற்சாலையான சென்னை பெரம்பூர் ஐசிஎப்-ல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பதில், நிரந்தர பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும், நவ.7-ம் தேதி கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்த நாளை மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.