ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நேற்று முதல் முறையாக சர்வதேச மராத்தான் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா (54) போலோ விளையாட்டு அரங்கத்தில் இருந்து நேற்று தொடங்கி வைத்தார்.
அவரும் மராத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு 21 கி.மீ தூரத்தை நிறைவு செய்தார். அவர் சராசரியாக ஒரு கி.மீ தூரத்தை 5 நிமிடங்கள் 54 நொடிகளில் கடந்தார். மராத்தான் ஓட்டத்தில் பங்கேற்பதற்காக உமர் அப்துல்லா எந்தவித பயிற்சியும் மேற்கொள்ளவில்லை.
இதற்கு முன் 13 கி.மீ தூரத்துக்கு அதிகமாக அவர் ஓடியதும் இல்லை. மராத்தான் ஓட்டத்தில் உமர் அப்துல்லா தனது வீட்டை கடந்து சென்றார். அப்போது அவரது குடும்பத்தினரும் மற்றவர்களும் உற்சாகப்படுத்தினர். ஓடுவதற்கு தேவையான சக்தி கிடைப்பதற்காக வழியில் ஒரு வாழைப்பழம் மற்றும் இரண்டுபேரீச்சம் பழம் மட்டுமே அவர் சாப்பிட்டார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் விடுத்த செய்தியில், ‘‘நீங்கள் உடல் நலத்துடன் இருக்க மருந்துகள் தேவையில்லை, ஒரு கிலோ மீட்டர் தூரம் அல்லது மராத்தான் போன்ற போட்டியே போதுமானது. உடலுக்கு தேவையான இயற்கையான உற்சாகம் கிடைக்கும். முயற்சிசெய்து பாருங்கள். போதைப் பொருள் அற்ற ஜம்மு காஷ்மீருக்காக நாம் ஓடுவோம்’’ என குறிப்பிட்டிருந்தார்.
சர்வதேச மராத்தான் போட்டியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி கூறுகையில், ‘‘மக்கள் காஷ்மீர் வர விரும்புகின்றனர். இது போன்ற மராத்தான் நிகழ்ச்சிகள் உலக மக்கள், காஷ்மீர் வர அழைப்பு விடுக்கிறது. உலகின்சொர்க்கம் காஷ்மீர்’’ என குறிப்பிட்டுள்ளார்.