சூளைமேடு,
அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி, சேத்துப்பட்டில் பல்வேறு இடங்களில் சாலை ஓரமாக குப்பைகள் குவிந்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகரில் பல்வேறு இடங்களில் கடந்த 14, 15, 16-ம் தேதிகளில் தொடர் மழை பெய்தது. இந்த மழையால் பள்ளமான பகுதிகள், சாலைகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடானது.
இதன்பிறகு, மழை படிப்படியாக குறையத் தொடங்கினாலும், மழை நீரில் அடித்து வரப்பட்ட குப்பைகள் பல இடங்களில் குவிந்திருந்தன. இதுபோல, முறிந்துவிழுந்த மரக்கிளைகள், வீடுகளில் வீணான பொருட்கள் ஆகியவை சாலை மற்றும் தெரு ஓரங்களில் உள்ள குப்பைத்தொட்டிகளில் நிரம்பி காணப்பட்டன.
இவற்றை முறையாக அகற்றாததால், பல இடங்களில் குப்பைகள் குவிந்துள்ளன. குறிப்பாக சூளைமேடு, அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி, மேத்தா நகர், சேத்துப்பட்டு, சூளைமேடு கண்ணகி தெரு, காந்தி சாலை, வடஅகரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் குப்பைகள் குவிந்தன. குறிப்பாக, கண்ணகி தெருவில் இருந்து அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி நோக்கி செல்லும் பாதையில் கால்வாய் பக்கம் குப்பைகள் குவிந்து காணப்பட்டன. காமராஜர் நகரிலும் முறையாக குப்பைகள் அள்ளப்படவில்லை.
அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் பேருந்து நிலையம் அருகேயும், பசும்பொன் தெரு, பாரதிதாசன் தெரு, சிட்கோ தெரு, மீன் சந்தை தெரு உட்பட பல இடங்களில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடந்தன.
மழையின்போது, வீடுகளில் சேதமடைந்து வீணான பொருட்கள், மரக் கிளைகள் முறிந்து அதன்மூலமாக உருவான குப்பைகள் உள்பட பல்வேறு கழிவுகள் சாலையோரம் கிடந்தன. சில இடங்களில் மீன் கழிவுகள் உட்பட உணவு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனால், இந்த வழியாக சென்ற பாதசாரிகள் மூக்கை மூடிக்கொண்டு சென்றனர்.
மேத்தாநகர், சேத்துப்பட்டு: மேத்தா நகரில் பிரதான சாலை ஓரமாக வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் நிரம்பின. இதனால், மக்கள் குப்பைத் தொட்டிகளுக்கு அருகே குப்பைகளை கொட்டிவிட்டுச் சென்றனர். இதுபோல, செனாய் நகரில் வெங்கடாசலபதி பிரதான சாலை ஓரம் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியும் பழுதடைந்ததால், பொதுமக்கள், குப்பைகளை அதன் அருகே போட்டுவிட்டு செல்கின்றனர்.
குப்பை தொட்டிகள் நிரம்பி இருந்ததால், அதனருகே குப்பைகளை வீசிவிட்டு செல்கின்றனர். அதன்பிறகு, குப்பை எடுக்க வருபவர்களும் சரியாக அல்லாமல் குப்பை தொட்டிகளில் உள்ள குப்பைகளை மட்டும் எடுத்து செல்கின்றனர்.
இதனால், குப்பை கொட்டும் இடங்களிலும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. நாள்தோறும் குப்பைகள் முறையாக அகற்றப்படாததால், துர்நாற்றம் வீசுகிறது. இதுதவிர, சேத்துப்பட்டு ஜெகநாதபுரத்தில் உள்ள பள்ளி சாலை, தனம்மாள் தெரு, டாக்டர் டி.வி. சாலை உள்ளிட்ட இடங்களிலும் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
தெருக்கள், சாலைகளில் குப்பைகளை அகற்றி சுத்தமாக வைத்திருப்பது தொடர்பாக ஏதாவது புகார் தெரிவிக்க, ஒவ்வொரு இடத்திலும் தூய்மை பராமரிப்பாளர் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனால், அந்த தொலைபேசி எண்கள் பல இடங்களில் குறிப்பிடப்படாமல் உள்ளது. எனவே, குப்பைகளை அகற்றுவது தொடர்பாக கருத்து தெரிவிக்க, எல்லா இடங்களிலும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை சூளைமேட்டை சேர்ந்த சிவா கூறுகையில், “பலஇடங்களில் மழை காலத்தில் சேர்ந்த குப்பைகள் சரியாக அகற்றப்படாமல் உள்ளது. இவற்றை முறையாக அகற்ற வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் குப்பையை எடுக்க வண்டியில் வரும் நபர்கள் சரியானநேரத்துக்கு வருவது கிடையாது.
அவர்கள் குப்பைகளை பெறாததால், சாலை அல்லது தெரு ஓரமாக உள்ள குப்பைத்தொட்டிகளில் குப்பைகளை போடவேண்டியுள்ளது.
அங்கு கொட்டும் குப்பைகளை முறையாக அகற்றுவது இல்லை. இதனால், அங்கு குப்பைகள் சிதறி கிடக்கின்றன.இவற்றை முழுமையாக அகற்ற வேண்டும். குப்பைகளை அகற்றுவது தொடர்பாக கருத்துகளை தெரிவிக்க, ஒவ்வொரு தெருவிலும் தூய்மை பராமரிப்பாளர் தொலைபேசி எண்களை குறிப்பிடவேண்டும்” என்றார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிஒருவரிடம் கேட்டபோது, “மழைக்கு பிறகு, பல இடங்களில் குப்பைகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் குப்பைகள் அகற்றப்பட்டுவிட்டன. சில இடங்களில் குப்பைகளை அகற்றும்பணி நடைபெறுகிறது.
அங்கும் குப்பைகளை முழுமையாக அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குப்பைகளை அகற்றுவது தொடர்பான புகார்களை 1913 தொலைபேசி எண்மூலமாகவும், “நம்ம சென்னை” ஸ்மார்ட் கைப்பேசி செயலி மூலமாகவும் தெரிவிக்கலாம்”என்றார்.