காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு ஏற்கனவே இதயம் தொடர்பான பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் இது தொடர்பாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நுறையீரலில் உள்ள சளி காரணமாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் அவர் ஆற்றிய சேவைகள் என்றும் மனதில் தங்கி நிற்கும். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.