சென்னை :
‘ஒரே நாடு ஒரே தோ்தல்’மசோதாவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நிச்சயம் முறியடிப்பார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு; ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை(டிச. 12) ஒப்புதல் அளித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருந்த போதிலும்‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான இரு மசோதாக்களும் மக்களவையில் இன்று செவ்வாய்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளன.
இந்த நிலையில், ‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’மசோதாவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நிச்சயம் முறியடிப்பார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நாட்டு மக்களும் எதிர்த்துக் கொண்டிருக்கும் சூழ் நிலையில் அதனை கண்டு கொள்ளாமல் எதேச்சதிகார போக்குடன் ஆளும் பாசிச பாஜக அரசு நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
பாஜகவின் இது போன்று மக்கள் விரோத அராஜக போக்கினை நாட்டு மக்களுடன் இணைந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிச்சயம் முறியடிப்பார் என குறிப்பிட்டுள்ளார்.