சென்னை:
மாநிலத்தில் குற்றங்களை தடுக்க தவறுவது மட்டுமில்லாமல் குற்றவாளிகளையே கட்சி உறுப்பினர்களாக்கி, அவர்களுக்கு அடைக்கலம் வழங்குவது வெட்கக்கேடாக இல்லையா? என தமிழக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, தொடர் குற்றச்செயல்கள் புரிந்துவரும் ஒருவருக்கு தங்களது கட்சியில் பொறுப்பினை வழங்கி, மேலும் குற்றம்புரிவதற்கு துணைபோனது உங்கள் தலைமையிலான ஆளும் திமுக கட்சிதானே? 15 வழக்குகள் உள்ள ஒரு தொடர் குற்றவாளி சுதந்திரமாக சுற்றி வர அனுமதி வழங்கி பெண்களுக்கு எதிரான குற்றங்களை அதிகரிக்கச் செய்வதுதான் திராவிட மாடலின் அடிப்படை கொள்கையா?
அண்ணா பல்கலையின் சிண்டிகேட் உறுப்பினராக இருந்த தங்களது மகன் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆசி பெற்ற திமுக நிர்வாகி தான் இந்த குற்றச்செயல் புரிந்தது என்ற ஒரு சோறு போதுமே, சட்டம் ஒழுங்கின் மீது தங்கள் திமுக அரசுக்கு உள்ள அக்கறையின் பதம் பார்க்க! இந்த குற்றத்தை செய்ய அந்த நபருக்கு எங்கிருந்து தைரியம் வந்தது என தற்போது புரிகிறது.
ஆளுங்கட்சியின் உறுப்பினர், நம்மை கட்சி பாதுக்காக்கும் என்ற இறுமாப்புதானே இதை செய்ய வைத்துள்ளது. இந்த குற்றத்தின் பாதிப்பழியை திமுக ஏற்றுக்கொள்ள வேண்டுமே ஒழிய தட்டிக்கழிக்க முடியாது.
இப்படி ஒரு கொடிய விஷப்பாம்பிற்கு தெரிந்தே பால் வார்த்து விட்டு, 3 மணி நேரத்தில் கைது செய்துவிட்டோம் என மார்தட்டுவதில் என்ன பயன்? கல்வி நிறுவனத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் பழுதாகி இருக்கிறது எவ்வாறு நம்ப இயலும்? கைது செய்வதுபோல் காட்சிப்படுத்தி விட்டு பின்பு போதிய பாதுகாப்பு இல்லை என்று விடுவிப்பதற்காகவா?
கைது செய்த மணி நேரங்களைக் குறிப்பிட்டு இதனை தினந்தோறும் நடக்கும் சாதாரண நிகழ்வு போல தாங்களும் தங்கள் அரசும் நிறுவ முனைந்தாலும், மக்கள் அதனை நம்பி ஏமாறக் கூடியவர்கள் அல்ல. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபின் நாள்தோறும் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது பத்தோடு பதினொன்று அல்ல!
தமிழகத்தின் முக்கியமான கல்வி நிறுவனத்தில் அதுவும் கவர்னர் மாளிகை மற்றும் காவல்நிலையத்திற்கு மிக அருகிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், ஒரு மாணவிக்கு எதிரான குற்றத்தை தடுக்க இயலவில்லை என்றால், தமிழகப் பெண்களின் எதிர்காலம் என்ன?
நாட்டை உலுக்கிய நிர்பயா வழக்கு, மேற்கு வங்காள பெண் மருத்துவர் வழக்கினைக் காட்டிலும் கொடுமையானது இது. காரணம், ஆளும் திமுக அரசின் உறுப்பினரே நகரின் மையப் பகுதியில், எந்த அச்சமுமின்றி இதை நிகழ்த்தியுள்ளார்.
எனவே தனிப்படை, உடனடி கைது என எந்தவொரு அரசியல் தற்காப்பு வார்த்தைகளை கொண்டு இந்த அரசு தப்பிக்க முடியாது. தாங்கள் வகிக்கும் பொறுப்பின் மீது துளி அக்கறை இருந்தால் கூட பெண்களுக்கு எதிராக பெருகிவரும் குற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயலுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.