தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!!

சென்னை:
தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “படித்தவரே கண்ணுடையவர், படிக்காதவர் முகத்தில் இரண்டு புண்களை உடையவரே” என்கிறார் திருவள்ளுவர். இது கல்வியின் இன்றியமையாத் தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கல்வியை தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவியர் பெற வேண்டுமானால், ஆசிரியர் பணியிடங்கள் முறையாக அவ்வப்போது நிரப்பப்பட வேண்டும், அனைத்துப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பபட வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இதன்மூலம் தான் தரமான கல்வியை அனைவரும் பெற முடியும். இதனைச் செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உண்டு. ஆனால், இதைக்கூட அளிக்க முடியாத அவல நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, கலந்தாய்வு இரண்டு ஆண்டுகளாக நீதிமன்ற வழக்கு காரணமாக நடைபெறவில்லை என்றும், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும், இதன் காரணமாக அரசு தொடக்கப் பள்ளிகளில் 2,200 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் செய்தி வந்துள்ளது.

இது தவிர, ஆயிரக்கணக்கான ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது.

தி.மு.க. அரசிற்கு உண்மையிலேயே மாணவ, ணவியரின் கல்வி மீது அக்கறை இருந்திருக்குமானால், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கினை விரைவுபடுத்தி காலிப் பணியிடங்களை நிரப்பி இருக்க வேண்டும்.

இதைச் செய்யாததன் காரணமாக, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 20 முறைக்கு மேல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தி.மு.க. அரசின் இந்த மெத்தனப் போக்கு காரணமாக, மாணவர்களின் கல்வித் தரம் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கும் கூடுதல் வேலைப் பளு ஏற்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி பாதித்தால் நமக்கு என்ன? ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதித்தால் நமக்கு என்ன? ஆசிரியர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தால் நமக்கு என்ன? அரசாங்கத்திற்கு செலவு குறைகிறதா என்ற நோக்கத்தில் தி.மு.க. அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒரு வேளை இதுதான் “திராவிட மாடல்” போலும். இது மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் நலனைப் பாதிக்கும்.

கல்வியின் இன்றியமையாத் தன்மையைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *