டெல்லி:
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு இன்னைக்கி தொடங்கியதில் இருந்தே பாஜக பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
தற்போதுவரை பாஜக 46 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 24 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் அதிஷி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக எம்.பி. யோகேந்திர சந்தோலியா, “பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கெஜ்ரிவால் எல்லா மாடல்களிலும் சரிந்துள்ளார்.
கெஜ்ரிவால் திகார் சிறைக்கு செல்வது உறுதி. அவர் முதல்வர் ஆக விரும்பினார் ஆனால் இனி அவர் எம்.எல்.ஏ.வாக கூட இருக்கப் போவதில்லை. பாஜக மேலிடத்தால் தேர்ந்தெடுக்கப்படும் எந்தக் கட்சித் தொண்டனும் டெல்லியின் அடுத்த முதல்வர் ஆவார்” என்று அவர் தெரிவித்தார்.