அப்பாவி மக்களைப் பலியாக்கி குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறதா திமுக அரசு? என வானதி சீனிவாசன் கேள்வி!!

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி (வயது 78), அவரது மனைவி அலமேலு (வயது 75) தங்கள் தோட்டத்தில் வசித்து வந்தனர்.

இந்த தம்பதியின் மகனான செந்தில்குமார் ஐடி ஊழியர். கோவையில் தன் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். மகள் பத்மாவதி, சென்னிமலையில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி தோட்டத்து வீட்டின் வாசலில் ரத்தக் காயங்களுடன் தெய்வசிகாமணி கிடந்தார். வீட்டிற்குள் அலமேலு, செந்தில்குமார் இறந்த நிலையில் இருந்தனர்.


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த கொலை வழக்கில் 14 படைகள் அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக, திருப்பூர் கொடுவாயில் தமிழக காவல்துறையைக் கண்டித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஜனவரி 9ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் திருப்பூர் மூவர் படுகொலை வழக்கில் அப்பாவி மக்களைப் பலியாக்கி குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறதா திமுக அரசு என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் நடந்த மூவர் படுகொலை வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு குறவர் இன மக்களைக் காவலர்கள் அடித்து துன்புறுத்துவதாக அம்மக்கள் கண்ணீர் மல்க அளித்துள்ள பேட்டி வேதனையளிக்கிறது.

தமிழகத்தையே உலுக்கிய அச்சம்பவம் நடந்து மாதங்கள் பல கடந்தும், குற்றவாளியைக் கண்டுபிடிக்க இயலாத தங்களின் நிர்வாகத் தோல்வியை மறைத்து, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அடக்குமுறையை ஏவி தங்கள் மீது படிந்துள்ள கறையைத் துடைக்க துடிக்கிறதா திமுக அரசு?

முறையான சாட்சியங்கள் இருப்பின் சட்டத்தின் முன் சமர்ப்பிப்பதை விடுத்து ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கச் சொல்லி மிரட்டுவது ஏன்?

ஒருவேளை இந்த வழக்கிலும் கழக உடன்பிறப்புகளுக்கு ஏதாவது தொடர்பு இருக்குமோ? அதனால் தான் முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல அப்பாவி மக்களைப் பலியாக்கி குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறதா திமுக அரசு?

புகார் கொடுப்பவர்களின் முழு விலாசத்தை வெளியிடுவது, குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவனாக இருந்தால் பஞ்சாயத்து செய்து பைசல் பண்ணுவது, செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு பாமர மக்களை அச்சுறுத்துவது போன்ற மாண்பற்ற செயல்களுக்கு, தமிழக காவல்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் திரு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *