குறட்டை வராமல் தடுக்கும் வழி முறைகள்…….

தூக்கத்தில் தொண்டையில் உள்ள தசைகள் தளர்வடைந்து மூச்சுக் குழாயின் உள்சுற்றளவு குறைகிறது. இந்த குறுகிய பாதையில் காற்று செல்லும்போது குறட்டை ஏற்படுகிறது.

குறட்டையானது பெரும்பாலும் பாதிப்பில்லாதது என்றாலும், அது தூக்கத்தை சீர்குலைத்து பகல்நேர சோர்வு மற்றும் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், ரத்த சர்க்கரை அதிகரித்தல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

குறட்டை ஏற்படுவதற்கு முக்கிய காரணம்:
மரபணு காரணங்கள், உடல் பருமன், சளி, ஒவ்வாமை, சைனஸ் பிரச்சினைகளால் ஏற்படும் மூக்கடைப்பு, மூக்கு செப்டம் விலகல், சிறிய தாடை போன்ற முக கட்டமைப்பு காரணங்கள், தொண்டை சதை (டான்சில்) வீக்கம், மல்லாந்து படுத்து தூங்கும் பழக்கம் (இதில் நாக்கு பின்வாங்கி சுவாசபாதையை தடுக்கும்), தைராய்டு குறைபாடு, புகைப்பழக்கம், மது பழக்கம், இரவில் அதிக தூக்க மாத்திரை உட்கொள்ளுதல்.

நீரிழிவு நோயாளிகளில் 4 பேரில் ஒருவருக்கு தூக்கத்தில் குறட்டையால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு குறட்டை விடும் போது ஏற்படும் மூச்சுத்திணறல், குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை உண்டாக்கி, இன்சுலின் எதிர்மறை நிலையை ஊக்குவிக்கிறது.

அது மட்டுமல்ல, குறட்டை விடும் போது சிலருக்கு ஏற்படும் மூச்சுத்திணறல், நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவை குறைத்து, கார்டிசால் போன்ற ஹார்மோன் அளவை அதிகரிக்க செய்து, ரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது.

மேலும் குறட்டை விடும் பழக்கம் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாவதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

குறட்டை வராமல் தடுக்க சர்க்கரை நோயாளிகள் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.
1) தினசரி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொண்டும், நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டும்.

2) புகைப் பழக்கம் மற்றும் மதுபழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.

3) மூக்கடைப்பு பிரச்சினை உள்ளவர்கள் நாசி பாதைகளை திறக்க மற்றும் காற்றோட்டத்தை மேம்படுத்த நாசி டைலேட்டர்கள் அல்லது ஒவ்வாமை மருந்துகளை பயன்படுத்தலாம்.

4) போதுமான அளவு தண்ணீர் குடித்து நீரேற்றத்துடன் இருங்கள். ஏனெனில் நீரிழப்பு தொண்டை திசுக்களை வறட்சியடையச் செய்து குறட்டையை மோசமாக்கும்.

5) மல்லாக்க படுத்து தூங்காமல் பக்கவாட்டில் படுத்து தூங்க முயற்சி செய்ய வேண்டும்.

6) சற்று உயரமான தலையணையை பயன்படுத்துவது சுவாச பாதையை திறந்து வைத்து குறட்டையை குறைக்க உதவும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *