சென்னை:
தமிழக அரசின் பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக, பாஜக கட்சிகள் நேற்று வெளிநடப்பு செய்தன. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
அப்போது பட்ஜெட்டை தாக்கல் செய்யுமாறு நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அழைத்தார்.
இதற்கிடையே, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் எழுந்து, பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கடிதம் அளித்துள்ள நிலையில், அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
‘இரு நாட்களுக்கு எந்த விவாதமும் இல்லை, அமருங்கள்’ என பேரவைத் தலைவர் தெரிவித்தார். ஆனால் உதயகுமார் தொடர்ந்து தனது கடிதத்தை பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த கூச்சலை பொருட்படுத்தாது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார்.
உடனே எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி எழுந்து, டாஸ்மாக் ஊழல் குறித்து விவாதிக்கக் கோரினார்.
இதற்கும் அனுமதி கிடைக்காத நிலையில் பட்ஜெட் உரையை புறக்கணித்து, அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
அவர்களைத் தொடர்ந்து டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து பாஜக எம்எல்ஏக்களும் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இவர்களைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களும் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு குறித்து செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: பேரவைத் தலைவர் பதவி நீக்க தீர்மானத்தை இன்று எடுத்துக் கொள்ளுமாறு ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டார்.
அக்கோரிக்கையை பேரவைத் தலைவர் ஏற்க மறுத்தார். தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக டாஸ்மாக் மற்றும் இதர மதுபான தொழிற்சாலையில் அமலாக்கத் துறை சோதனை செய்ததின் அடிப்படையில், ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
டாஸ்மாக் நிறுவனம் மூலம் திமுக ஆட்சியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதையெல்லாம் சட்டப்பேரவையில் குறிப்பிட்டு, திமுக அரசு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு பழனிசாமி கூறினார்.
சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திமுக அரசின் மதுபான ஊழல் டெல்லியில் நடைபெற்றதைவிட அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது.
பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 கூடுதலாகவும், மதுபான ஆலைகளிடமிருந்து பணமும், இரவு 10 மணிக்கு மேல் அதிக தொகைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. ரூ.1000 கோடி ஊழல் என்கிறார்கள்.
இன்னும் என்னென்ன தகவல்கள் வெளியாகும் என தெரியவில்லை. இதையெல்லாம் கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம். ஊழலை மறைக்கவே திமுக அரசு மும்மொழிக் கொள்கை, ரூபாய் சின்னம் குறித்து பேசிவருகிறது” என்றார்.
வானதி சீனிவாசன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாநில அரசின் தோல்விகளை, ஊழல்களை மறைக்க ரூபாய் சின்னத்தை மாற்றுவதாக நாடகம் நடத்துகின்றனர். அதனால் மாநில அரசின் பட்ஜெட்டை புறக்கணிக்கிறோம்” என்றார்.