சென்னை:
சென்னை திருவான்மியூரில் நடைபெறும் தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டத்துக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வருகை தந்தார்.
தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் (மார்ச் 28) நடைபெறுகிறது.
இதில் தவெக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
கட்சி தொடங்கப்பட்ட பின்பு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் இந்நிகழ்வானது தவெகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கான முக்கிய பகுதியாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சமீப காலமாக நடந்து வரும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 17 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பொதுக்குழு கூட்டத்துக்காக திருவான்மியூர் கன்வென்ஷன் சென்டரில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. உறுப்பினர்கள் வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அழைப்பிதழ், க்யூ-ஆர் கோடு மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வருகை தரும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். கூட்டத்துக்கு வருகை தரும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்காக காலை உணவு மற்றும் மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி மொத்தம் 1500 பேருக்கு காலை உணவாக பொங்கல், வடை, சட்னி, சாம்பார் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. தொடர்ந்து 2,500 பேருக்கு மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி, சாம்பார், மிளகு ரசம், தயிர் வடை உள்பட 22 வகையான உணவுகள் தயாராகி வருகின்றன.
பொதுக்குழுவுக்காக தயார் செய்யப்பட்டிருக்கும் மேடையில் வேலுநாச்சியார், காமராஜர், அம்பேத்கர், பெரியார், அஞ்சலையம்மாள் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.