சென்னை:
தங்கள் எஜமானர் கொண்டு வந்தது என்பதால் எஸ்ஐஆரை பழனிசாமி ஆதரிக்கிறார். ஆனால், அதிகப்படியாக அவரது வாக்குகள் தான் காலியாகப் போகிறது என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டுப் போட்டது, ஓட்டுக்கு காசு கொடுத்தது எல்லாம் தேர்தல் ஆணையத்துக்குத் தெரியாதா?
இதை எல்லாம் தேர்தல் ஆணையத்தால் சரிசெய்ய முடியவில்லை. ஜனநாயக நாட்டில் வாக்குரிமை தான் மக்களுக்கு உள்ள உரிமை. அதை இவ்வளவு தான்தோன்றித்தனமாக பதிவு செய்துகொடுத்துவிட்டு போ எனச் சொல்வது எப்படிச் சரியாகும்?
இதுவரை வாக்காளர்கள் தங்களுக்கான ஆட்சியாளர்களை தேர்வு செய்தார்கள். ஆனால் இப்போது, ஆட்சியாளர்கள் தங்களுக்கான வாக்காளர்களை தேர்வு செய்கிறார்கள். இதுதான் எஸ்ஐஆர். திமுகபோன்ற கட்சிகளுக்கு அமைப்பு உள்ளது. அவர்கள் பணிகளை செய்கிறார்கள்.
எங்களைப் போன்ற வளர்ந்து வரும் கட்சிகள் என்ன செய்ய முடியும்? இதனால், குறைந்தது ஒரு கோடி பேர் வாக்குரிமையை இழப்பார்கள். குடிமக்களுக்கான ஆதாரமே ஆதார் என்றீர்கள். இப்போது அது இல்லை என்கிறீர்கள்.
இரண்டு மாதத்தில் தேர்தல் வந்துவிடும். தேர்தல் பரப்புரைக்கு ஓடிக்கொண்டு இருக்கிறோம். அத்தகைய சூழலில் இது என்ன மாதிரியான நெருக்கடி. மக்களை ஏன் பதற்றமாகவே வைத்துள்ளீர்கள்? அதிமுக எஸ்ஐஆரை ஆதரிக்கிறது. ஏனென்றால், அவர்களது எஜமான் கொண்டு வந்தது.
பழனிசாமி ஆதரிக்கிறார். ஆனால், அதிகப்படியாக அவரது வாக்குகள் தான் காலியாகப் போகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.