சென்னை:
புதுக்கோட்டை அருகே இச்சடியில் திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே. செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்ற பெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இருக்கிறார் என்றால் தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையை படித்து விட்டு ஆங்கிலத்தில் சிறப்பாக பேசக்கூடிய ஆற்றல் படைத்த காரணத்தால் பிரதமர் மோடி அவரை ஒன்றிய அமைச்சராக ஆக்கியுள்ளார்.
நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் திமுகவால் கெட்டுப் போய்விட்டார்கள், எல்லோரும் தமிழ், ஆங்கிலம் மட்டுமே படிக்கின்றனர், தமிழ் படித்தால் பிச்சை கூட எடுக்க முடியாது என பேசுகிறார். தமிழ்நாட்டில் உள்ள யாரும் பிச்சை எடுக்கவில்லை, தமிழ்நாட்டின் வரிப்பணத்தை தான் உத்திர பிரதேசத்திற்கு பிரதமர் மோடி பிச்சை போடுகிறார். தமிழ்நாடு கொடுக்கிற இடத்தில் உள்ளது.
திமுக 75 ஆண்டு காலத்தை கடந்துள்ளது. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் எல்லாம் இடம் தெரியாமல் போய்விட்டார்கள். ராஜாஜி திமுகவை மூட்டை பூச்சி போல் நசுக்குவேன் எனக் கூறினார். ஆனால் ராஜாஜி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்கும் சூழல் ஏற்பட்டது.
பெருந்தலைவர் காமராஜ் திமுகவை மிக கடுமையாக விமர்சித்தவர். காமராஜர் உயிரோடு இருந்திருந்தால் திமுகவில் உறுப்பினராக சேர்ந்திருப்பார். எம்ஜிஆர் மரணப் படுக்கையில் இருந்த போது கலைஞர் கருணாநிதியை சந்திக்க அனுமதித்திருந்தால், எம்ஜிஆர் அதிமுகவை கலைஞரிடம் ஒப்படைத்து இருப்பார்.
திமுக என்பது ஒரு மாதிரியான கட்சி, துரோகம் செய்தால் விளைவுகள் மோசமாக இருக்கும், திமுகவை எதிர்த்துப் பேசினால் கல்லறையில் இடம் பிடித்து விட்டார் என அர்த்தம். 75 ஆண்டுகளாக திமுகவுடன் மோதி சின்ன பின்னமாகி கட்சியை கலைத்து விட்டு ஓடியவர்கள் உண்டு.
ஆனால் நேற்று முளைத்த ஒரு காளான், 17 மாதம் கூட ஆகாமல் திமுகவை சீண்டிப் பார்ப்பேன் என்று சொன்னால், திமுக காரன் தூங்கினால் கும்பகர்ணன், எழுந்து நின்றால் இந்திரஜித் என்பதை மறந்து விடக்கூடாது. திமுக ஆளுங்கட்சி என்பதால் அடக்கி வாசிக்கிறோம். எங்களுக்கு சவால் விடுகிற யோக்கிதை இல்லாதவர்கள் எல்லாம் பேசுகிறார்கள்” என கடுமையாக பேசினார்.