சென்னை,
சென்னை ஆவடியை அடுத்த கண்ணப்பாளையம், பாரதி நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 47). தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் இருந்தனர்.
இவரது மூத்த மகள் சர்மிளா (வயது 19) அயப்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த மாதம் 29-ந் தேதி காலை சர்மிளா தூங்கி எழுந்தபோது திடீரென அவருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டதால் அவர் சொரிந்து கொண்டே இருந்தார்.
சில நிமிடங்களில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் எல்லாம் வீக்கம் ஏற்பட்டது. உடனே வீட்டிலிருந்த மஞ்சளை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டு குளிப்பதற்காக சர்மிளா சென்றுள்ளார்.
அப்போது அவர் திடீரென வாயில் நுரை தள்ளி மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை சங்கர், சர்மிளாவை அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவேற்காட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஒரு நாள் முழுவதும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் பெற்றோர் சர்மிளாவை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சர்மிளா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ஆவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முல்லைவேந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
முதல்கட்ட விசாரணையில் ஏற்கனவே சர்மிளாவின் தந்தை சங்கருக்கு இதை போன்று விஷ பூச்சி கடித்து அரிப்பு ஏற்பட்டு உடலில் வீக்கம் ஏற்பட்டதும், இதைபோல சர்மிளாவிவையும் விஷ பூச்சி ஏதாவது கடித்து உயிரிழந்திருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
ஆயினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சர்மிளாவின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.