மதுரை:
திருவிழாக்களின் நகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்புக்குறியதாகும்.
இதில் சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் நிகழ்வாக நடக்கும் மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், அதனை தொடர்ந்து வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்வு என நகரமே 2 வாரங்கள் விழாகோலம் பூண்டிருக்கும்.
இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த மாத இறுதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முன்னதாக கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடக்கமாக வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தல்லாக்குளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்த நிகழ்ச்சி மற்றும் ஆயிரம்பொன் சப்பரம் தலை அலங்காரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பிற்பகல் 11 மணிக்கு மேல் வண்டியூர் வைகை ஆற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறுகிறது.
அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற மே மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது. 9-ந்தேதி சுந்தர்ராஜ பெருமாள் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
10-ந்தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து மதுரைக்கு புறப்பாடாகிறார். 11-ந்தேதி மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 12-ந்தேதி காலை 5.45 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து அண்ணாநகர் வழியாக வண்டியூர் வீர ராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் இரவு எழுந்தருளுகிறார். 13-ந்தேதி (செவ்வாய்கிழமை) வீர ராகவ பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பாடாகும் கள்ளழகர் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.
அங்கு மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல் நடக்கிறது. தொடர்ந்து இரவு முதல் விடிய விடிய தசாவதார கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார்.
மறுநாள் (14-ந்தேதி) அதிகாலை மோகன அவதாரத்தில் காட்சியளிக்கும் கள்ளழகர் ராஜாங்க அலங்கராத்தில் அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபத்திற்கு புறப்பாடாகிறார்.
அன்று இரவு அங்கிருந்து பூப்பல்லக்கில் புறப்படும் கள்ளழகர் 15-ந்தேதி இருப்பிடம் நோக்கி செல்கிறார். 16-ந்தேதி காலை 10 மணிக்கு மேல் கோவிலுக்கு கள்ளழகர் வந்தடைகிறார். 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
மேற்கண்ட தகவலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையம் யக்ஞ நாராயணன் தெரிவித்துள்ளனர்.