சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
அரசு போக்குவரத்து கழகத்தி்ல் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு, கடந்த 2024 செப்டம்பர் 26-ம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஒருநாள் இடைவெளியில் மீண்டும் அமைச்சராகவும் பதவியேற்றார்.
இந்த நிலையில், அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி வித்யாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ‘தற்போது அமைச்சராக இல்லை என்று கூறி ஜாமீ்ன் பெற்ற செந்தில் பாலாஜி, ஜாமீன் கிடைத்த ஒருநாள் இடைவெளியில் மீண்டும் அமைச்சராகி உள்ளார்.
இதனால், அவருக்கு எதிராக சாட்சி அளிக்க யாரும் முன்வரமாட்டார்கள் என்பதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை கடந்த மார்ச் 24-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி அமர்வு, ‘‘செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர விரும்புகிறாரா, இல்லையா என்பதை கேட்டு தெரிவிக்குமாறு ஏற்கெனவே அறிவுறுத்தினோம். அவரது தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதா?’’ என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, ‘‘இந்த வழக்கில் பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும்’’ என்று கோரினார்.
அதற்கு அதிருப்தி நீதிபதிகள், இதுதொடர்பாக 10 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர். இந்த சூழலில், செந்தில் பாலாஜி தரப்பில் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றதில் சட்டரீதியாக எந்த முரணும் இல்லை. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீன் உத்தரவிலும், நான் அமைச்சராக பதவி வகிக்க சட்ட ரீதியாக எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
அதில் கூறப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை நான் இதுவரை மீறவில்லை. மனுதாரர் எந்த ஒரு ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளையும் என் மீது சுமத்தவில்லை. எனவே, இந்த மனுவை ஆரம்பகட்டத்திலேயே நிராகரிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் மீண்டும் இதே அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் நேரமின்மை காரணமாக, தேதி குறிப்பிடாமல் வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.