2020-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இணைந்த அண்ணாமலைக்கு, மிக விரைவிலேயே 2021 ஜூலை மாதம் மாநில தலைமை பொறுப்பு வழங்கப்பட்டதை கட்சிக்குள்ளேயே பலரும் ஆச்சர்யமாக பார்த்தனர்.
பாஜகவில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதியின்படி, மீண்டும் அண்ணாமலை தலைவராக்கப்படலாம் என்ற யூகங்கள் பொய்யாகி, நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
பாத யாத்திரை, சாட்டையடிப் போராட்டம், செருப்பு அணியாமல் இருப்பது என்பன போன்ற நூதனமான செயல்பாடுகளால் தமிழக பாஜக தினசரி அரசியல் தளத்தில் பேசப்படுவதற்கான ஆதாரமாக விளங்கிய அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் இனி என்னவாகும்?
தமிழ்நாடு பாஜகவின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், மாநில தலைவர் பதவியிலிருந்து வெளியேறிய தலைவர்களுக்கு தேசிய அளவிலான பொறுப்புகள், குறிப்பாக மத்திய இணையமைச்சர் அல்லது மாநில ஆளுநர் பதவிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், எல். முருகன், சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை கூறலாம்.
இந்நிலையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆந்திர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக மத்திய தலைமை பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.