தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
இந்நிலையில் நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலை பகுதிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை என வனத்துறையினர் அறிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் குற்றால அருவி பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
