மதுரை:
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்காலங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை-சுந்தரேசுவரர் மதுரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்கு விஜயம் போன்ற வைபவங்களை தொடர்ந்து 10-ம் திருநாளான நேற்று திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவை காண ஏராளமானோர் திரண்டனர்.
தொடர்ந்து அன்னதானம், திருக்கல்யாண விருந்து, மொய் செலுத்துதல் போன்றவையும் நடைபெற்றன. சித்திரை திருவிழாவின் மற்றொரு முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக 2 தேர்களும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன.
இன்று அதிகாலை 4 முதல் 4.30 மணிக்கு மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் ஆகியோர் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து ஒரே பல்லக்கில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.
அதன்பிறகு பிரியாவிடை -சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர்.
அப்போது திரண்டிருந்தவர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள கருப்பண சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
காலை 5.05 மணிக்கு மேல் 5.29 மணிக்குள் மேஷ லக்கனத்தில் ரதாரோஹணம் நடைபெற்று காலை 6.30 மணிக்கு முதலில் சுவாமி தேரையும், தொடர்ந்து அம்மன் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
மாசி வீதிகளிள் ஆடி அசைந்து வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரின் முன்பாக ஏராளமான சிவ பக்தர்கள் கைலாய வாத்தியங்களை முழங்கியபடியும், பல்வேறு இசைகளை இசைத்தபடியும் மீனாட்சி- சுந்தரேசுவரர் பதிகம் பாடியபடியும், ஹர ஹர சிவா என பக்தி முழக்கம் விண்ணைப்பிளக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துசென்று சாமி தரிசனம் செய்தனர்.
4 மாசி வீதிகளிலும் தேர்கள் அசைந்தாடி சென்றதை பொதுமக்கள் சாலையின் இருபுறமும் உள்ள உயர்ந்த கட்டிடங்களில் நின்றும் தரிசனம் செய்தனர். சுவாமி-அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லப்பட்டது.
அதன் பிறகு விநாயகர், முருகன், நாயன்மார்கள் தனித்தனி சிறிய சப்பரங்களில் சென்றனர். மாசி வீதிகளை வலம் வந்த தேர்கள் மதியம் நிலையை வந்தடைந்தன. அதன் பிறகு சண்டிகேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது.
தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவிழாவை காணவந்த பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. மக்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக போக்குவரத்தில் போலீசார் மாற்றங்கள் செய்து அதனை செயல்படுத்தினர்.
தேரோட்டத்தை தொடர்ந்து இன்று மாலையில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் சப்தாவர்ண சப்பரத்தில் மாசி வீதிகளை வலம் வருகின்றனர். நாளை (10-ந் தேதி) உச்சிக் காலத்தில் பொற்றாமரை குளத்தில் தீர்த்த திருவிழா நடக்கிறது. இரவு 10.15 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் 16 கால் மண்டபத்தில் இருந்து விடை பெற்றுச் செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியோடு மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வேடத்தில் சுந்தரராஜபெருமாள் கண்டாங்கி பட்டுடுத்தி நாளை தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார்.
நாளை மறுநாள் (11-ந் தேதி) மதுரை நோக்கி வரும் அழகரை வழியெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் பக்தர்கள் திரண்டு வரவேற்கிறார்கள்.
மதுரையில் மூன்றுமாவடியில் நாளை மறுநாள் காலை 6 மணிக்கு எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மூன்று மாவடியில் சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றியும் சிறப்பு தீபாராதனை காட்டியும் அழகரை மதுரை மக்கள் வரவேற்க உள்ளனர்.
இதைத்தொடர்ந்து அன்று இரவு தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் அழகர் தங்குகிறார். அங்கு அவர் திருமஞ்சனம் கொள்கிறார். அங்கு அவருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.
12-ந்தேதி காலை தங்க குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து மக்களுக்கு அருள் பாலிக்கிறார். அதன்பின் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி ஆயிரம் பொன் சப்பரத்தில் அதிகாலை 3.30 மணி அளவில் எழுந்தருள்கிறார்.
பின்னர் சித்ரா பவுர்ணமி தினத்தன்று முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.