நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை!!

புதுடெல்லி:
நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி கொடூர தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேரை சுட்டுக் கொன்றனர்.

இதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய ராணுவம் கடந்த 7-ம் தேதி மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசியது. இதில், 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஆபரேஷன் சிந்தூர்: மறுநாள், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள 15 முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் 400 ட்ரோன்களை பாகிஸ்தான் வீசியது.

இந்தியா தனது அதிநவீன ஆயுதங்களான எல்-70 பீரங்கி, சில்கா பீரங்கி, எஸ்-400 (சுதர்சன சக்கரம்) உள்ளிட்டவற்றால் பாகிஸ்தானுக்கு கடுமையாக பதிலடி கொடுத்தது.

பாகிஸ்தான் வீசிய ட்ரோன்கள், ஏவுகணைகளை இந்திய படைகள் வெற்றிகரமாக நடுவானிலேயே தகர்த்து அழித்து,பாகிஸ்தானின் பதில் தாக்குதலை முறியடித்தன.

பாகிஸ்தானின் 3 முக்கிய விமான தளங்கள் உட்பட 8 ராணுவ மையங்களை குறிவைத்து, இந்திய போர் விமானங்கள் கடந்த 10-ம் தேதி காலை தாக்குதல் நடத்தின. இதில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.

இந்த சூழலில், இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தீவிரம் அடைந்ததால், அமெரிக்க அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக போர் நிறுத்தம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, இந்தியாவும் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து, போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன.

இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் நேற்று (மே 11) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறினால், தக்க பதிலடி கொடுக்குமாறு முப்படைகளுக்கும் பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

தீவிரவாத ஊடுருவலை முற்றிலும் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த பின்னணியில், இன்றும் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *