ஊட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!!

ஊட்டி:
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தோட்டக்கலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.


இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 3-ந் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நடந்து முடிந்துள்ளது. ஊட்டி ரோஜா பூங்காவில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய ரோஜா கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.


கோடைவிழாவின் சிகர நிகழ்ச்சியாக ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சி உள்ளது. சர்வதேச அளவில் புகழ் பெற்ற மலர் கண்காட்சி வருகிற 15-ந் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்குகிறது. 15-ந் தேதி தொடங்கி வருகிற 25-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்க உள்ளது.

மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி வருகிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தார்.

அங்கு கோவை மாவட்ட தி.மு.க.வினர் திரண்டு வந்து முதல்-அமைச்சரை மேள, தாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர்.
அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் அங்கிருந்து காரில் நீலகிரிக்கு புறப்பட்டார்.

முதல்-அமைச்சர் சாலை மார்க்கமாக மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு பயணமானார்.


ஊட்டிக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் கோத்தகிரி, கட்டப்பெட்டு, ஊட்டி சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர், பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல்-அமைச்சரும் காரில் இருந்தவாறு பொதுமக்களையும், கட்சியினரையும் பார்த்து கையசைத்தபடியே சென்றார்.


வரவேற்பு முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகைக்கு சென்றார். இன்று அவர் அங்கு தங்கி ஓய்வெடுத்தார். ஊட்டியில் இருக்கும் நாட்களில் அவர் சில அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார்.

அதன்படி பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டா வழங்குகிறார். இதுதவிர பழங்குடியின மக்களையும் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.


வருகிற 15-ந் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது ஊட்டி மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பூங்காவில் வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்கள், பூத்து குலுங்கும் மலர்களையும் பார்வையிடுகிறார்.

ஊட்டி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு வருகிற 16-ந் தேதி(வெள்ளிக்கிழமை) ஊட்டியில் இருந்து கோவை வந்து, அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகை, முதல்-அமைச்சர் செல்லும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *