நீலகிரி ;
நீலகிரி மக்களவைத் தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் எல்.முருகன் ஹெத்தையம்மன் கோயிலில் சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ வருகை தந்தார். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாகவே கூட்டத்தினர் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு, வேட்பாளர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட ஐந்து பேர் மட்டும் மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
மற்றவர்கள் உதகை ஏடிசி திடல் அருகே காத்திருந்தனர். அப்போது அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோருடன் மனு தாக்கல் செய்வதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
அப்போது பாஜகவினர் கூட்டமாக கூடியிருந்ததால் அவர்களை ஒதுங்கி செல்லுமாறு போலீஸார் வலியுறுத்தியுள்ளனர். பாஜகவினர் தொடர்ந்து சாலையை மறித்தபடி நின்று இருந்தனர். இதனால் போலீஸார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தடியடியில் 19 பேருக்கு காயம் ஏற்பட்டது. அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 14 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 5 பேருக்கு படுகாயம் என்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே வேட்பு மனு தாக்கலுக்காக ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்த அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் மற்றும் பாஜகவினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
பின்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவினர் மீது தடியடி நடத்திய காவல் கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்யக்கோரி அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் தரப்பில் பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதையடுத்து இந்த போராட்டம் கைவிடப்பட்டது. இதன் காரணமாக உதகையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.