சென்னை:
பிளஸ் -2 தேர்வு முடிவு கடந்த 8-ந்தேதி வெளியானது. 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேர் தேர்வு எழுதினர்.
இதில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்தனர். மாணவ-மாணவிகள் உயர்படிப்பில் சேருவதற்கு வசதியாக தற்காலிக மதிப் பெண் சான்றிதழ் இன்று (12-ந்தேதி) வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்து இருந்தார்.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மேல் நிலைப்பள்ளிகளிலும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்யப்பட்டது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் தேர்வுத் துறை இணைய தளத்தின் வழியாக சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்தர்.
என்ஜினீயரிங், கலை அறிவியல், வேளாண்மை, மருத்துவம் சார்ந்த பல்வேறு படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.
அதனால் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க மதிப்பெண் சான்றிதழ் அவசியமாகிறது. உயர்படிப்பில் சேருவதற்கு பிளஸ் 2 மதிப்பெண் கல்வி தகுதியாக இருப்பதால் மதிப்பெண் சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளனர்.
இதனால் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் தற்காலிக சான்றிதழ் பெற குவிந்தனர். மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து அதில் பள்ளி தலைமை ஆசிரியர் முத்திரையிடப்பட்டு அவர் கையொப்பமிட வேண்டும்.
பள்ளியின் முத்திரை இல்லாத சான்றிதழ் செல்லாது. அதனால் அந்த பணியில் அனைத்து பள்ளி அலுவலகங்களும் ஈடுபட்டன. பகல் 1 மணிக்கு மேல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அதிக மாணவர்கள் கொண்ட தனியார் பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் நாளை வினியோகிக்கப்படுகிறது.
சென்னையில் மாநகராட்சி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்பட்டன. தாங்கள் படித்த பள்ளிகளில் மாணவர்கள் பிளஸ் 2 சான்றிதழ் வாங்குவதற்கு வரிசையில் காத்து நின்றனர்.