உளுந்தூர்பேட்டை:
கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது.
புகழ் பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள், வெளி நாடுகளை சேர்ந்த திருநங்கைகள், திருநம்பிகள் பங்கேற்று கூத்தாண்டவரை வழிபடுவார்கள்.
அதன் படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி சாகை வார்த்தடன் தொடங்கியது. இதையொட்டி கூத்தாண்டவர் கோவில் முன் கூவாகம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கூழ் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.
மேலும் சாகை வார்த்தலையொட்டி சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பாரத பிரசங்க முறை நிகழ்வுகள் கடந்த 8-ந் தேதி வரை நடைபெற்றது. தினமும் இரவு 10 மணிக்கு உற்சவர் கூத்தாண்டவர் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
சித்திரை பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கூத்தாண்டவர் சுவாமிக்கு கண் திறத்தலும், அதனை தொடர்ந்து திருநங்கைள் அரவானை தங்களது கணவராக ஏற்றுக் கொண்டு திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வும் மாலை நடைபெற உள்ளது.
அப்போது கோவில் பூசாரிகளிடம் திருநங்கைகள், திருநம்பிகள் திருமாங்கல்யம் ஏற்றுக் கொண்டு கூத்தாண்டவருக்கு தேங்காய் உடைத்து வழிபடுவர்.
கூவாகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்வார்கள்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.
திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளுதல், தேரோட்ட நிகழ்ச்சியில் திருநங்கைகள் அதிக அளவில் பங்கேற்பார்கள் என்பதால் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.