திருப்பதி
டிட்வா புயல் காரணமாக திருப்பதி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இடைவிடாது பெய்து வரும் மழையால் திருப்பதியில் தரிசனத்திற்கு வந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மழையில் நனைந்தபடி குளிரில் நடுங்கி கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
பலத்த மழையால் பாபவிநாசம், ஸ்ரீவாரி பாதத்திற்கு செல்லும் வழிகளை தேவஸ்தான அதிகாரிகள் மூடினர்.
மேலும் அலிபிரியில் இருந்து மலைக்குச் செல்லும் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டுமென பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
பலத்த மழையால் திருப்பதி மலையில் உள்ள கோகர்ப்பம், பாப விநாசம், ஆகாச கங்கா, குமாரதாரா, பசுபதாரா அணைகள் முழுமையாக நிரம்பியது. கோகர்ப்பம், பாப விநாசம் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
மழையில் பல்வேறு இடங்களில் திடீரென நீர்வீழ்ச்சிகள் உருவாகி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. திருப்பதி மலைக்கு செல்லும் பக்தர்கள் நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழ்ச்சி அடைந்து செல்கின்றனர்.
திருப்பதியில் நேற்று 68, 187 பேர் தரிசனம் செய்தனர். 25,027 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
ரூ.4.47 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.