”ஆலங்குடி அருகே தவளை நோயால் பாதிக்கப்பட்டுள்ள பசு மாடு”!!

புதுக்கோட்டை:

பசு மாடுகள் கர்ப்பம் தரித்து 8 மாதங்களைக் கடந்ததும், சில நேரங்களில் சத்து குறைபாடு காரணமாக படுக்கையைவிட்டு எழ முடிவதில்லை. இதனால், 2 பின்னங்கால்களையும் மடக்கி வைத்துக் கொண்டு தவளைபோல மாறி விடுகின்றன.

இந்த நோயால் பாதிக்கப்படும் பசு மாடுகள் பெரும்பாலும் அதிலிருந்து மீள்வதில்லை. தற்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக இத்தகைய பாதிப்பு இருப்பதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி செல்வம் கூறியது: கன்றுக் குட்டியில் இருந்தே பசுவை ஆரோக்கியமாக பராமரித்து வருகிறோம்.

சினை பிடித்த பிறகு மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லுதல், தவிடு, புண்ணாக்கு உள்ளிட்ட உலர் தீவனம், பசுந்தீவனம் கொடுத்து வந்தாலும், 7 அல்லது 8-வது மாதத்தில் படுத்த மாடு மீண்டும் எழுவதில்லை.

வயிற்றில் கன்றுக்குட்டி இருப்பதால் கயிறு கட்டி தூக்கி நிறுத்தவும் முடியவில்லை. இதையடுத்து, 10 மாதங்கள் வரை படுக்க வைத்திருந்தாலும் பெரும்பாலும் கன்றுக் குட்டிகள் உயிரிழந்துவிடுகின்றன.

சில நேரங்களில் மாடுகளும் உயிரிழந்து விடுகின்றன. இப்போதுதான் இதுபோன்ற நோய் பாதிப்பு மாடுகளுக்கு ஏற்படுகிறது என்றார்.

இதுகுறித்து புதுக்கோட்டை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் ரிச்சர்டு ஜெகதீசன் கூறியது: கால்சியம், பாஸ்பரஸ் பற்றாக்குறை ஏற்படும்போது இதுபோன்ற பிரச்சினை வரும்.

கர்ப்பம் தரித்த முதல் 3 மாதங்களில் கன்றுக்குட்டியின் பாகங்கள் உருவாகும். அதற்கு அடுத்து குறைந்த அளவில் வளர்ச்சி இருக்கும். கடைசி 3 மாதங்களில் அதீத வளர்ச்சி இருக்கும். திடகாத்திரமான கன்றுக்குட்டி 35 கிலோ முதல் 40 கிலோ எடை இருக்கும். கடைசி 3 மாதங்களில் சத்தான உணவு கொடுக்கப்பட வேண்டும். குறிப்பாக கால்சியம், பாஸ்பரஸ் அதிகமாக இருக்க வேண்டும்.

நாளொன்றுக்கு 20- 30 கிலோ பசுந்தீவனம், இரவு நேரத்தில் சோளத்தட்டை, வைக்கோல் கொடுக்க வேண்டும். அதேபோல, தாது உப்புக் கலவையை தினமும் 50 கிராம் வீதம் கொடுக்கும்போது கால்சியம் பற்றாக்குறை நீங்கும். இந்த தாது உப்புக் கலவை அரசு கால்நடை மருத்துவமனைகள் மற்றும் தனியாரிடம் கிடைக்கும்.

கோடை காலத்தில்தான் இத்தகைய பாதிப்பு அதிகமாக இருக்கிறது. எனவே, கோடை காலத்தில் 60- 80 லிட்டர் தண்ணீரை 2 அல்லது 3 பகுதியாக பிரித்து கொடுக்கலாம்.

மேலும், தானியங்களை அரைத்து 2- 3 கிலோ கொடுக்க வேண்டும். இதைப் பின்பற்றினால் பசு மாடுகள் தானாக குட்டிகளை ஈனும்.

தவளை நோயால் பாதிக்கப்படாது. கரு உருவாகும் போதே சத்தான உணவு கொடுக்க வேண்டும். உடல் நலக்குறைவு ஏற்பட்ட பிறகு கால்நடை மருத்துவரிடம் சிகிச்சை அளிக்கலாம். கால்நடைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் 1962 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *