“நீட் தொடர்பான நாடகங்களை அரங்கேற்றுவதை விடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வைப்பதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!!

சென்னை:
“நீட் தொடர்பான நாடகங்களை அரங்கேற்றுவதை விடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வைப்பதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும் திறந்த மனதுடன் நீட் தேர்வின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து அதை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்சம் தமிழகத்திற்கு மட்டுமாவது விலக்களிக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுதி விட்டு, முடிவுக்காக காத்திருந்த சேலம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்த கவுதம் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மாணவர் கவுதமை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர் கவுதம் ஏற்கனவே 3 முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியவில்லை. இந்த முறையும் நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காமல் போய் விடுமோ? என்ற அச்சம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. நீட் தேர்வு, மாணவர்களை எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டுகிறது என்பதற்கு மாணவன் கவுதமின் தற்கொலை எடுத்துக்காட்டு ஆகும்.

நீட் தேர்வுக்கு அஞ்சி நடப்பாண்டில் மட்டும் இதுவரை 6 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி, மார்ச் 28-ஆம் தேதி கிளாம்பாக்கம் தர்ஷினி, ஏப்ரல் 3-ஆம் தேதி எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி சத்யா, ஏப்ரல் 4-ஆம் தேதி புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி, கடந்த மே 4-ஆம் தேதி கயல்விழி என 5 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இப்போது மாணவர் கவுதம் உயிர்நீத்திருக்கிறார். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட 2017-ஆம் ஆண்டிலிருந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடரும் நிலையில், அதற்கு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் வேதனையான உண்மை. நீட் எந்த நோக்கங்களுக்காக கொண்டு வரப்பட்டது என்று மத்திய அரசு கூறியதோ, அந்த நோக்கங்கள் இன்னும் நிறைவேறவில்லை. நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு வெறும் 150 மதிப்பெண் எடுத்தவர்கள் பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு மருத்துவப் படிப்பை படித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஆனால், 500க்கும் கூடுதலான மதிப்பெண்கள் எடுத்திருந்தும் கூட லட்சக்கணக்கில் கட்டணம் கட்ட வழியில்லாதவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. மருத்துவ மாணவர் சேர்க்கையை தகுதியை விட பணம் தான் தீர்மானிக்கிறது என்பது தான் நீட் தேர்வின் அறிமுகத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள சூழலாகும். இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தும் நீட் தேர்வு தேவையா? என மத்திய அரசு சிந்திக்க வேண்டும்.

இன்னொருபுறம் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி வசனம் பேசிய முதலமைச்சர், அதன் பின் 50 நாட்களாகப் போகும் நிலையில் சட்டப் போராட்டம் நடத்துவதற்காக உச்சநீதிமன்றத்தில் எந்த வழக்கையும் தொடரவில்லை.

மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அவர்களை நீட் என்ற ஒரு தேர்வு தொடர்ந்து பலி வாங்குவதை அனுமதிக்க முடியாது. எனவே, நீட் தொடர்பான நாடகங்களை அரங்கேற்றுவதை விடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வைப்பதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும் திறந்த மனதுடன் நீட் தேர்வின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து அதை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்சம் தமிழகத்திற்கு மட்டுமாவது விலக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *