நெல்கொள்முதலில் பலநூறு கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், விவசாயிகளின் புகாருக்கு திமுக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் – டிடிவி தினகரன்!!

சென்னை:
நெல்கொள்முதலில் பலநூறு கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், விவசாயிகளின் புகாருக்கு திமுக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை அரசே கொள்முதல் செய்துவந்த நிலையில், நடப்பாண்டு திடீரென தனியார் நிறுவனத்திற்கு அனுமதியை வழங்கி அதற்காக 170 கோடி ரூபாய் வரை முன்பணமாக திமுக அரசு கொடுத்திருப்பதாகவும் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

தற்போது எவ்வித காரணமும் தெரிவிக்கப்படாமல் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை திமுக அரசே ரத்து செய்திருப்பதும் விவசாயிகள் மத்தியில் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

திமுக அரசின் இந்த திடீர் முடிவால் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பலநூறு கோடி ரூபாய் வரை பணம் வழங்கப்படாமல் இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய தொகையை உடனடியாக வழங்குவதோடு, நெல்கொள்முதல் செய்ததில் எழுந்திருக்கும் முறைகேடு புகார் தொடர்பாக முறையான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உணவுத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *