இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தது. இந்தியா நடத்திய இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில் இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானின் வான்வெளி தளங்கள் உட்பட பல கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. இதனையடுத்து சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதாக பாகிஸ்தான் முன்வந்தது.
இந்த நிலையில், இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியுள்ளார். காஷ்மீர் விவகாரம், பயங்கரவாதம், சிந்து நதி பிரச்சினை, வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என குறிப்பிட்டுள்ளார்.
தெஹ்ரானில் ஈரான் அதிபர் உடன் நடந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உரை யாற்றினார்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர், பயங்கரவாதிகளை ஒப்படைப்பது குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என இந்தியா கூறி வருகிறது.