கோவை:
தனியார் யூடியூப் சேனலில் பெண் போலீசார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவை மாநகர சைபர் கிரைம் பெண் போலீஸ் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். அந்தந்த மாவட்ட போலீசாரும் தாங்கள் செய்த வழக்குகளில் அவரை கைது செய்து வந்தனர்.
இந்த நிலையில் சவுக்கு சங்கர் தன் மீது உள்ள அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்துக்கு மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
சுப்ரீம் கோர்ட்டு, சவுக்கு சங்கர் மீது பதியப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை கோவைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பதியப்பட்ட 15 வழக்குகள் கோவை சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டன.
பழைய எப்.ஐ.ஆர்களை கொண்டு கோவையில் வழக்கை விசாரிக்க முடியாது என்பதால் கோவை சைபர் கிரைம் போலீசார் 15 வழக்குகளையும் புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இதையடுத்து கோவை சைபர் கிரைம் போலீசார், முதற்கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீசார், சாட்சியங்கள் என 130 பேருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதில் இதுவரை 129 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், இதுவரை பெரும்பாலான சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளோம்.
இன்னும் ஒரு மாதத்தில் விசாரணை நிறைவடைந்து விடும். விசாரணை முடிந்ததும் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியை தொடங்க உள்ளோம் என்றனர்.