பிற வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் புதிய கட்டணம்- இந்தியன் வங்கி அறிவிப்பு!!

சென்னை:
வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பது தொடர்பாக கட்டண விதிமுறைகளில் மாற்றம் செய்து ரிசர்வ் வங்கி சீரான இடைவௌியில் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

இதனை வங்கிகள் பின்பற்றி வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலித்து வருகின்றன.

அதன்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏ.டி.எம்.களில் இருந்து ஒரு மாதத்திற்கு 5 முறை இலவசமாக பணம் எடுக்க முடியும். தங்கள் வங்கி அல்லாத மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் இருந்து பெருநகரங்களில் ஒரு மாதத்துக்கு 3 முறையும், கிராமப்புறங்களில் 5 முறையும் இலவசமாக பணம் எடுத்து கொள்ளலாம்.

ஏ.டி.எம்.களில் நிர்ணயிக்கப்பட்ட இந்த அளவை தாண்டி பணம் எடுக்கும்போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன.

இந்த கட்டணம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் சில தனியார் வங்கிகளுக்கு இடையே வேறுபட்டு காணப்படுகின்றன. புதிய கட்டணத்தை பெரும்பாலான வங்கிகள் கடந்த மே மாதம் அமல்படுத்தின.

இந்தநிலையில், இந்தியன் வங்கி சார்பில் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) பறந்தது. அதில், “ஜூலை 1-ந்தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்பட்ட தடவைகளை தாண்டி பிற வங்கி ஏ.டி.எம்.களில் மேற்கொள்ளப்படும் நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ.23 மற்றும் ஜி.எஸ்.டி.யும், நிதி அல்லாத சேவைகளுக்கு செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.11 மற்றும் ஜி.எஸ்.டி.யும் விதிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்ட தடவைகளை தாண்டி பிற வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும்போது ரூ.21 மற்றும் ஜி.எஸ்.டி. வரியாக 3 ரூபாய் 78 காசுகள் சேர்த்து 24 ரூபாய் 78 காசுகள் தற்போது வசூலிக்கப்படுகிறது.

ஜூலை 1-ந் தேதிக்கு பிறகு இந்த கட்டணம் ரூ.2 அதிகரித்து 26 ரூபாய் 78 காசுகள் என்ற அளவுக்கு உயரலாம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும்போது, நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள், அந்த வங்கிகளுக்கு தங்களது வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றியதற்காக ஏ.டி.எம். உள்பரிமாற்ற கட்டணங்களை செலுத்தும். அதற்காகவே பிற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும்போது, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதேபோல சில தனியார் வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பிற வங்கிகளில் அனுமதிக்கப்பட்ட தடவைகளை தாண்டி பணம் எடுப்பதற்கான கட்டண உயர்வை ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளன.

இதற்கிடையே கனரா வங்கியின் அனைத்து சேமிப்பு வங்கி கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *