தமிழ்க் கடவுளான முருகனை மனம் உருகி வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் அதிகளவில் உள்ளது. வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் முருகனுக்கு மிகவும் பிடித்த நாளாக உள்ளது செவ்வாய் கிழமை.
செவ்வாய்க்கிழமையில் வெற்றிலை தீபம் ஏற்றி முருகனை வழிபட்டால் முருகன் அகமகிழ்ந்து நாம் கேட்ட வரங்களை அள்ளிக் கொடுப்பான் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வெற்றிலைக்கு மட்டும் அப்படியென்ன மகிமை என்று கேட்டால், “வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதியும் காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக வரலாறு சொல்கிறது” அந்த அளவிற்கு வெற்றிலையானது புராண காலங்களை எல்லாம் தாண்டி தற்போதும் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்ற ஒரு புனிதப் பொருள் ஆகும்.
அனைத்து செடிகளும் மொட்டாகி பூவாகி காயாகி பழமாகும் மீண்டும் அதிலிருந்து விதை கிடைக்கும். ஆனால் வெற்றிலை மட்டும் ஒரே ஒரு உருவம் எடுத்தாலும் அது கடவுளையே சேரும். வெற்றிலை மற்றும் பாக்கு மகாவிஷ்ணு மற்றும் பார்வதி தேவியின் மறு உருவம் எனவும் கூறுவர்.
இப்படிப்பட்ட ஒரு தனி சிறப்பு மிகுந்த வெற்றிலையை தீபமேற்றி வழிபட வெற்றிகள் வந்து சேரும். வெற்றியில் தீபம் ஏற்றுவது என்பது ஒரு வழிபாட்டு முறையாகும்.
வெற்றிலை தீபத்தின் நன்மைகள்:
நெய் தீபம், எலுமிச்சை தீபம் போன்ற தீபங்களை ஏற்றுவதோடு முருகனுக்கு மிகவும் பிடித்த வெற்றிலை தீபத்தை தொடர்ச்சியாக 9 வாரங்கள் ஏற்ற வேண்டும். மனம் உருகி வெற்றிலை தீபம் ஏற்றி முருகனை வழிபடும் போது நினைத்த காரியங்கள் நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம். குறிப்பாக குழந்தை வரம் வேண்டுபவர்கள் முதல் திருமணம் விரைவில் கைக்கூட வேண்டும் என்று நினைப்பவர்கள் வெற்றிலை தீபம் ஏற்றுவதால் விரைவாக அனைத்தும் கைக்கூடும்.
வெற்றிலை தீபம் ஏற்றும் முன் கட்டாயம் செய்ய வேண்டியது:
வெற்றிலை தீபம் ஏற்றுவதற்கு முன்னதாக பூஜை அறையை நன்கு சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். பனீர் தெளித்து சுத்தம் செய்யும் போது வாசனை நமது மனதை அமைதியாக்கும்.
வெற்றிலை தீபத்தை எப்போது ஏற்றினாலும் நுனி இல்லாத வெற்றிலையைப் பயன்படுத்தக்கூடாது. மேலும் வெற்றிலையில் காம்போடு விளக்கேற்றக்கூடாது.
வெற்றிலை தீபம் ஏற்றும் முறை:
முதலில் 12 வெற்றிலைகளை எடுத்துக்கொண்டு முதல் ஆறு வெற்றிலைகளை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து மயில் தோகை போல் வட்டமாக அடுக்கி வைக்கவேண்டும்.
அடுக்கி வைக்கப்பட்ட வெற்றிலைக்கு நடுவில் தீபமேற்றி வழிபட வேண்டும். வீட்டில் சிறிய வேல் இருந்தால் அதையும் வைத்துக் கொள்ளலாம். பிறகு அதில் இரண்டாவது ஆறு வெற்றிலையில் காம்புகளை கிழித்து காம்புகளை எல்லாம் விளக்கிலிருக்கும் நல்லெண்ணெயில் போட்டு விடவேண்டும் விளக்கு எரியும் பொழுது ஒரு நல்ல நறுமணம் வீசும். இவ்வாறான வெற்றிலை வழிபாடு நல்ல பலன்களைத் தரும்.
வெற்றிலை தீபம் எப்போது ஏற்ற வேண்டும்?
முருகப் பெருமானுக்கு மிகவும் பிடித்த நாள் செவ்வாய் கிழமை. இந்த நாளில் வெற்றிலை தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. எனவே செவ்வாய் ஹோரையில் விளக்ககேற்ற வேண்டும். அதாவது அதிகாலை 3 மணியிலிருந்து 4 மணி வரையும், காலை 6 மணியிலிருந்து 7 மணி வரையும், மதியம் 1 மணியிருந்து 2 மணி வரையும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையும் விளக்கேற்றுவது நல்லது.