முனீச்:
3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச் நகரில் இன்று தொடங்கி 14-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஒலிம்பிக், உலக சாம்பியன்கள் உள்பட 78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
குறிப்பாக ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்களான சீனாவின் லி யுஹோங், 20 வயதான ஷெங் லிஹாவ், ஸி யு உள்ளிட்ட ஜாம்பவான்கள் களம் காண்கின்றனர்.
இந்திய அணியில் மொத்தம் 36 வீரர், வீராங்கனைகள் அங்கம் வகிக்கிறார்கள்.
இவர்களில் பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற மனு பாக்கர், வெண்கலம் கைப்பற்றிய சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் குசாலே ஆகியோரும் அடங்குவர்.
ஒலிம்பிக்கில் இரண்டு முறை கலந்துகொண்டவரான தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இளவேனில் மற்றும் தேசிய சாம்பியன் அனன்யா நாயுடு (பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள்), ஆதித்யா மால்ரா, நிஷாந்த் ரவாத் (ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல்) ஆகியோர் முதல் முறையாக உலக போட்டியில் அடியெடுத்து வைக்கிறார்கள்.
பியூனஸ் அயர்சில் நடந்த முதலாவது சீசனில் இந்தியா 4 தங்கம் உள்பட 8 பதக்கமும், லிமாவில் நடந்த 2-வது சீசனில் இந்தியா 7 பதக்கமும் அறுவடை செய்தது.
ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த மனு பாக்கர் உலக போட்டியிலும் சாதிப்பாரா என ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.