முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி கொடுத்ததை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பறித்துவிட்டதாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் மாயவன் குற்றச்சாட்டு!!

சென்னை:
முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி கொடுத்ததை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பறித்துவிட்டதாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் மாயவன் குற்றம்சாட்டினார்.

சென்னை, பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் கட்சித் தலைவர் விஜய்யை, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் மாயவன் கூறியதாவது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து 8 முறை சந்தித்த பின்னரும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை. அரசை நம்பி ஏமாற்றமடைந்தோம்.

மிகப்பெரிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கும் நிலையில், அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவை கோரி வருகிறோம். அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்தோம். அவரும் ஆதரவளித்து, அரசுக்கு அழுத்தம் தருவதாக உறுதியளித்தார். ஜாக்டோ ஜியோவையும் அழைத்து போராட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாததால் அதிமுக தலைவர்களைச் சந்திப்பது தொடர்பாக முடிவு செய்யவில்லை. அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு எதுவும் கொடுக்கவில்லை.

முன்னாள் முதல்வர் அண்ணா, கருணாநிதி கொடுத்த ஈட்டிய விடுப்பு சரண் உள்ளிட்டவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் பறித்துவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக பரந்தூர் போராட்டக் குழு தலைவர் சுப்பிரமணியன் கூறும்போது, “தவெகவைத் தொடங்கியதும் முதல் போராட்டமாக எங்களது போராட்டத்துக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்ததற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தோம்.

பரந்தூரில் ஏன் விமான நிலையம் அமையக் கூடாது என்பது குறித்த விவரங்கள் அடங்கிய விரிவான மனுவை அவரிடம் அளித்துள்ளோம்.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் வரை துணை நிற்பதாகவும், திட்டத்துக்கு எதிராக எவ்விதப் போராட்டமாக இருந்தாலும் ஆதரவளிப்பதாகவும் விஜய் உறுதியளித்தார். தேவைப்பட்டால் கண்டிப்பாக போராட்ட களத்துக்கு வருவதாகவும் கூறினார்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *