வேண்டுமென்ற எங்களை கொடுமை செய்வதற்காக நிற்க வைத்துள்ளனர் – தமிழிசை..!

சென்னை;
1000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இப்போராட்டத்துக்கு காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். பாஜக தொண்டர்களும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பாஜக தலைவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் மாலை 6 மணிக்கு மேல் ஆகியும் விடுதலை செய்யப்படாமல் இருந்தனர். இதனால், பாஜகவினர் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரை மீட்டு தமிழிசை அவரது காரில் அப்பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதைத்தொடர்ந்து தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெண்களை 6 மணிக்கு மேல் அடைத்து வைத்திருப்பது சட்டப்படி தவறு. நாங்கள் என்ன பயங்கரவாதிகளா. திருட்டுக் கூட்டமா இல்லை ஊழல் செய்தோமா.

ஊழல் செய்ததை தட்டிக் கேட்டதற்காக தடுப்பு நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டுள்ளோம். 6 மணி வரை போலீஸார் கொடுத்ததைத்தான் சாப்பிட்டோம். அவர்களிடம் எந்தவொரு கோரிக்கையும் வைக்கவில்லை.

6 மணிக்கு மேலாகியும் பெண்களை விடுதலை செய்யவில்லை. என்ன அடக்குமுறை இங்கு நடக்கிறது. பெண் ஒருவர் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கிறோம். சில பேர் மாதிரி கைதானவுடன் நெஞ்சுவலி வருவது போல பாசாங்கு செய்யவில்லை.

பெண்களை விடுவிக்காமல் வைத்திருப்பதற்கான காரணம் தெரியவில்லை. வேண்டுமென்ற எங்களை கொடுமை செய்வதற்காக நிற்க வைத்துள்ளனர். அரசியல் கட்சியினரை, அரசியல் கட்சி தலைவர்களை இப்படித்தான் இந்த அரசு நடத்துமா.

இந்த செயலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். என்ன தவறு செய்தோம் என்று இவ்வளவு கொடுமைகள் நடக்கின்றன. மயக்கம் போட்டு விழுந்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸுக்கு கூட வழிவகை செய்யவில்லை.

அரசியலில் இருக்கும் பெண்களை இப்படித்தான் கொடுமைப்படுத்துவீர்களா. டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடுபவர்களை இதுவரை விடுவிக்காமல் இந்த அரசு பழிக்கு பழி வாங்கி கொண்டிருக்கின்றனர். மனசாட்சி இல்லாத ஆட்சி. மன வேதனையாக இருக்கிறது என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *