அமராவதி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது -கரையோர கிராமங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

உடுமலை:
அமராவதி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. அமராவதி ஆற்றில் உபரி நீர் திறக்க வாய்ப்பிருப்பதால், கரையோர கிராமங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணையின் நீர் மட்டம் இன்று (ஜூன் 14) காலை 7 மணியளவில் 85.11 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

அமராவதி அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அமராவதி ஆற்றில் இருந்து எந்த நேரத்திலும் உபரி நீர் திறந்துவிடப்படலாம். எனவே அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, என்று அவர் கூறியுள்ளார்.

அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். 4 டிஎம்சி நீர் கொள்ளளவு கொண்டது. சனிக்கிழமை காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 625 கன அடி நீர் வரத்து இருந்தது.

வழக்கமாக அணையின் நீர்மட்டம் 88 அடி என்ற நிலையை எட்டும் பொழுது அணையில் இருந்து உடனடியாக உபரி நீர் ஆற்றில் திறக்கப்படும். அமராவதி அணையில் இருந்து தொடங்கி கரூர் மாவட்ட எல்லையில் ஆறு முடிவடைவதால் முன்னெச்சரிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *