சென்னை:
‘நான் முதல்வன்’ திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 42 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், 3.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் திறன் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் நேற்று நடைபெற்றது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து, 170 இளைஞர்களுக்கு சான்றிதழ்கள், ஊக்கத்தொகைக்கான காசோலை, பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து துணை முதல்வர் முன்னிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பல்வேறு நிறுவனங்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதன்படி, எல் அண்ட் டி, இந்திய கடற்படை, டிவிஎஸ், ஐஐடிஎம், டிக்ஸன் தொழில்நுட்ப நிறுவனம், ஜெர்மன் கல்வி பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், ஹெச்.சி.எல் நிறுவனத்துடன் இணைந்து தூத்துக்குடி, விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 2,500 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 42 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 3.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக தொடங்கப்பட்ட ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் மூலம் இன்றைக்கு 60 ஆயிரம் இளைஞர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இத்திட்டத்தின் மூலம், பள்ளி, கல்லூரி முடித்தவர்கள், இடைநின்றவர்கள், வேலையில் இருக்கின்றவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதைப் பயன்படுத்தி இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள வேண்டும். அதேபோல், திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஆடை, நகைவடிவமைப்பு, விவசாயம் என 35 துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இவற்றின் மூலமாக, பயிற்சி பெறக்கூடியவர்களில் 72 சதவீதம் பேர் சமூகத்தின் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாயுமானவர் திட்டம்: ‘தாயுமானவர்’ திட்டத்தின் பயனாளிகளுக்கு திறன் பயிற்சி கொடுப்பதில் முன்னுரிமை அளிக்கும் வகையில், அரசு காப்பகத்தில் இருக்கக்கூடிய ஆதரவற்ற மாணவர்களுக்கும் அவர்களுடைய வேலைவாய்ப்புக்கு ஏற்றார்போல் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சி அடிப்படையில் அவர்களுக்கு ரூ.12,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்றார். நிகழ்ச்சியில், சிறப்புத்திட்ட செயலாக்கத் துறை செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.