நாம், சமூகநீதி என்ற கொள்கையை மையமாக வைத்து வேகமாக முன்னேறுவோம் – அன்புமணி ராமதாஸ்!!

சென்னை:
காடுவெட்டியார் இருந்தால், பாமகவில் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது என அன்புமணி ராமதாஸ் கூறினார். கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது.

கூட்டத்தில் மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி, தலைமை நிலைய செயலாளர் செல்வக்குமார், பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், “பா.ம.க.வை பலப்படுத்த வேண்டும், உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அடுத்த கட்டத்துக்கு வேகமாக செல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்த பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுகிறது.

டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 25-ந் தேதி முதல் தமிழக மக்களின் உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். இந்த நடைபயணம் பா.ம.க.வுக்கு மிக முக்கியமானது. தி.மு.க. ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே இந்த நடைபயணத்தின் நோக்கம்.

இதற்காக தான் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்கிறேன். டாக்டர் ராமதாஸ் 45 ஆண்டு காலமாக கட்சிக்காக போராடி குலதெய்வமாக உள்ளார். நாம், சமூகநீதி என்ற கொள்கையை மையமாக வைத்து வேகமாக முன்னேறுவோம்.

நான் பா.ம.க. தலைவராக இருப்பதற்கு காரணம் கட்சித் தொண்டர்களும், டாக்டர் ராமதாசும் தான். அவர் தான் எனக்கு அரசியல் கற்றுக் கொடுத்தது.

எனக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்த ராமதாஸ் வழியில் தான் இனியும் செல்வேன். காடுவெட்டியார் இருந்தால், இதுபோன்ற குழப்பங்கள் கட்சியில் ஏற்பட்டிருக்காது.

கடலூர் மாவட்டம் என்னுடைய மாவட்டம். பா.ம.க. இல்லையென்றால் கடலூர் மாவட்டம் ஒரு பாலைவனமாக மாறி இருக்கும். 2026 சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும், தி.மு.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறக்கூடாது.

அதற்கு கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். அதுபோல் 4 தொகுதிகளில் பா.ம.க. வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். தற்போது நடைபெறுவது சமூகநீதிக்கு எதிரான ஆட்சி, அதை அகற்ற வேண்டும். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு விவகாரத்தில் முதலமைச்சர் தனக்கு அதிகாரம் இல்லை என கூறுகிறார்.

பிற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முதல்-அமைச்சர் தயக்கம் காட்டுவது ஏன்? மேலும் கரிவெட்டியில் நிலம் எடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

கரிவெட்டி பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால் மீண்டும் 2 நாட்களில் கடலூருக்கு திரும்பி நான் வருவேன்.

எத்தனை வஜ்ரா வந்தாலும் பார்த்துக்கொள்கிறேன். மண்ணையும், மக்களையும் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளேன். என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்த அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். 2026 தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் வர வேண்டும். அதற்கு கட்சியினர் தீவிரமாக உழைக்க வேண்டும். ராமதாஸ் காட்டிய வழியிலேயே அனைவரும் செல்வோம்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது. 80 வயது மூதாட்டியை கூட விட்டு வைக்கவில்லை. அதனால் தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயார் நிலையில் இருக்க வேண்டும். 8 மாதத்தில் ஊழலுக்கு எதிரான போர் நடைபெற உள்ளது” எனக் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *