வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை உடனே வழங்குக – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!

சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டு 1,208 நாள்களாகியும், அதை செயல்படுத்திடத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், வன்னியர்களுக்கு உடனடியாக உள் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற மாபெரும் மக்கள்திரள் போராட்டம் வரலாறு காணாத வெற்றியை பெற்றிருக்கிறது.

இதை சாத்தியமாக்கிய பாட்டாளி சொந்தங்களுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். வன்னியர்களின் அடிப்படை உரிமையான இட ஒதுக்கீட்டை வழங்க மறுக்கும் திமுக அரசின் சமூக அநீதியை அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் தான் விழுப்புரம் மக்கள்திரள் போராட்டத்திற்கு திரண்டு வரும்படி அழைப்பு விடுத்திருந்தேன்.

நேற்றைய போராட்டத்தில் தனிநபர்களாக பங்கேற்ற பாட்டாளிகளை விட, குடும்பத்துடன் கலந்து கொண்ட பாட்டாளிகள் தான் அதிகம். அதிலும் குறிப்பாக பெருமளவிலான பாட்டாளிகள் தங்களின் கைக்குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகளுடன் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இதன் மூலம் வன்னியர் இட ஒதுக்கீட்டு சிக்கலில் தங்களின் வலிகள், வேதனைகள், உணர்வுகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றையும், அவற்றைக் கடந்து தங்களின் எச்சரிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்; அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.

உங்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருந்தால், வன்னியர் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் நீங்கள் செய்தவை நியாயமானவையா? சமூகநீதி இலக்கணத்துடன் இயைந்ததவையா? என்பதை எண்ணிப்பாருங்கள்.

டாக்டர் ராமதாசால் 20.07.1980-ம் நாள் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டது முதல் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களின் சமூகநீதிக்காக வன்னிய மக்கள் போராடி வருகின்றனர்.

இனியும் தாங்கள் ஏமாற்றப்படுவதை தாங்கிக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை; இட ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கவும் அவர்கள் விரும்பவில்லை. சமூகநீதி அவர்களின் உரிமை.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, வன்னியர்களின் சமூகநீதியை மறுத்து உங்கள் தலைமையிலான ஆட்சிக்கு நீங்களே முடிவுரை எழுதி விடாதீர்கள். உங்களுக்கு இப்போது கிடைத்திருப்பது தான் கடைசி வாய்ப்பு.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வன்னியர்களின் வலிகள், வேதனைகள், உணர்வுகள் ஆகியவற்றை மதித்து, அவர்களின் உரிமையான உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றுங்கள் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *