டாஸ்மாக் முறைகேட்டில் அமலாக்கத் துறை தீவிரமாக ஆராய்ந்தால் சிறு மீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும் – தவெக தலைவர் விஜய் ….

சென்னை:
டாஸ்மாக் முறைகேட்டில் அமலாக்கத் துறை தீவிரமாக ஆராய்ந்தால் சிறு மீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்களில் கடந்த 6-ம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில், கணக்கில் வராத பணம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடத்துள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கையில் கூறியுள்ளது.

டாஸ்மாக்கில் நடந்துள்ள கணக்கில் வராத பணமோசடி குறித்து அமலாக்கத்துறை பயன்படுத்தியுள்ள வார்த்தைகளை பார்த்தால், வெற்று விளம்பர மாடல் திமுக அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதும் அளவுக்கு இருக்கிறது.

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதைப் பெருமையாகப் பறைசாற்றும் இதே அரசுதான் மக்கள் நலனைக் கெடுத்து, மதுவுக்கு அடிமையாக்கும் மது விற்பனையையும் செய்கிறது. அதே மதுவை வைத்து தான் முறைகேடும் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

எவ்வகையிலும் இதுபோன்ற முறைகேடுகளை ஏற்க இயலாது என பொதுமக்களே கோபத்தில் கொந்தளிக்கத் தொடங்கி உள்ளனர். ஊழலில், காட்டாற்றையே உருவாக்க வல்லவர்கள் என்பதே திமுகவின் ஆட்சி அதிகார வரலாறு.

அமலாக்கத் துறை தற்போது கையில் அள்ளி இருப்பது ஆயிரம் கோடி ரூபாய் என்ற கையளவு நீரே. இன்னும் தீவிரமாக ஆழ்ந்து ஆராய்ந்தால், இந்த டாஸ்மாக் முறைகேட்டில் மட்டுமே சிறு மீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும் என்றே தெரிகிறது.

மறைமுக முதலாளிகள்: ஆகவே, இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முறையான, நியாயமான விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும்.

ஆனால், விசாரணை நியாயமாக நடக்குமா என்பது, மேலே இருக்கும் மறைமுக முதலாளிகளுக்கும் இங்கிருக்கும் அவர்களின் உறவுக்காரர்களுக்கும் மட்டுமே வெளிச்சம்.

இதுபோன்ற முறைகேடுகள் மூலம் ஈட்டப்பட்ட பணம்தான் 200 தொகுதிகளை வெல்வோம் என்ற இறுமாப்புச் சூளுரையின் பின்னணியாக இருக்கும் போல. ஆனால், எத்தனைக் கோடிகளைக் கொட்டினாலும், இனி இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் ஊழல் வித்தைகள் செல்லாது.

இவர்களை 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவார்கள் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *