தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் குற்றாலம் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் சாரல் மழையின் எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் குற்றாலத்தில் உள்ள அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நேற்று காலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவியில் அபாய ஒலி எச்சரிக்கை விடுத்து சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர்.
மற்ற அருவிகளான ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இன்று காலையில் தொடர்ந்து வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தே காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனினும் சிற்றருவி மற்றும் புலியருவி ஆகிய 2 அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையில் குற்றால அருவிகளில் குளிப்பதற்காக வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் பிரதான அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
மழைப்பொழிவு குறைந்து அருவிகளுக்கு வரும் நீர்வரத்து சீராகும் பட்சத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.