பண்ருட்டி:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி அவர் நேற்று கடலூர் மாவட்டம், பண்ருட்டிக்கு வருகை தந்தார்.
அப்போது அவருக்கு அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்கள் மேளதாளங்களுடன் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் அங்கிருந்து ரோடு ஷோ மூலம் பொதுமக்கள், தொண்டர்களுடன் நடந்தவாறு பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவில் அருகில் இருந்து பஸ் நிலையம் வரை வந்தார்.
அதன் பின்னர் அவர் அங்கு மக்கள் மத்தியில் பேசியதாவது:-
நான் விஜயகாந்தை திருமணம் செய்த பின்பு பண்ருட்டிக்கு தான் முதலில் வந்தேன். இங்கு மக்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
பண்ருட்டி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்பும் சட்டமன்ற தொகுதிகள் விஜயகாந்தின் கோட்டை.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பண்ருட்டியில் வென்று தே.மு.தி.க. சரித்திரம் படைக்கும். கர்நாடகாவில் இருந்து வரும் வெள்ள நீர் கடலூருக்கு வந்து தான் கடலில் வீணாக கலக்கிறது.
மழைநீரை சேகரிக்க, மத்திய, மாநில அரசுகள் எதுவும் செய்யவில்லை. பண்ருட்டி பலா, முந்திரிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
முந்திரி ஏற்றுமதி மண்டலம் உருவாக்க வேண்டும். என்.எல்.சி.க்கு நிலம் எடுப்பதை தே.மு.தி.க.வன்மையாக கண்டிக்கிறது. மக்கள் பாதிக்கப்படுவதால் நிலம் கையகப்படுத்துவதை என்.எல்.சி.நிறுத்த வேண்டும்.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் மகத்தான வெற்றியை தர வேண்டும். தேர்தலின் போது மகத்தான கூட்டணி, மகத்தான வேட்பாளருடன் வருவேன். மக்கள் தே.மு.தி.க.விற்கு ஆதரவளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பிறகு பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மதுரை மாநாட்டில் த.வெ.க. தலைவர் விஜய், விஜயகாந்த்தை அண்ணன் என குறிப்பிட்டார்.
விஜய் எங்களுக்கு தம்பிதான். இது அரசியலுக்கு வந்ததற்கு பிறகு வந்ததல்ல. இந்த அண்ணன், தம்பி உறவு, விஜயகாந்த் திரைத்துறையில் வந்ததில் இருந்து தொடர்கிறது. தே.மு.தி.க. தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்றார்.