திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தரத்துடன் சுவையாக உள்ளதால் பக்தர்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 12-ந் தேதி தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்ததால் ஒரே நாளில் 4,86,134 லட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்தது.
லட்டு விற்பனை மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ 2.43 கோடி வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டு ஒரே நாளில் 3.24 லட்சம் லட்டுகள் விற்பனையானது. இதே போல் கடந்த ஆண்டு 1 கோடியே 4 லட்சத்து 57 ஆயிரத்து 350 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக 2 கோடியே 24 லட்சத்து 40 ஆயிரத்து 82 லட்டுகள் தயார் செய்யப்பட்டது. தற்போது பக்தர்களுக்கு வழங்குவதற்காக கூடுதலாக 4 லட்சம் லட்டுக்கள் இருப்பு வைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 65,112 பேர் தரிசனம் செய்தனர். 27,331 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.49 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.