ஓய்வு பெற்றதில் எந்த வருத்தமும் இல்லை; இந்திய அணிக்காக இவ்வளவு காலம் விளையாடியது மிகவும் அதிர்ஷ்டமே – புஜாரா நெகிழ்ச்சி பதிவு!!

ராஜ்கோட்:
இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேனான புஜாரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 37 வயதான அவர் கடைசியாக 2023-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடி இருந்தார்.

டிராவிட்டுக்கு அடுத்து ‘இந்தியாவின் சுவர்’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் ஓய்வு பெற்றதாக தகவல் வெளியானது.


இந்த நிலையில் ஓய்வு பெற்றதால் எந்த வருத்தமும் இல்லை என்று புஜாரா தெரிவித்து உள்ளார். சொந்த ஊரான குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓய்வு பெற்றதில் எந்த வருத்தமும் இல்லை. இந்திய அணிக்காக இவ்வளவு காலம் விளையாடியது மிகவும் அதிர்ஷ்டமே. பல வீரர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே எனக்கும், எனது குடும்பத்துக்கும், ஆதரவளித்த மக்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.

கிரிக்கெட்டை முடித்துக் கொண்டதில் மகிழ்ச்சிதான். அதே நேரத்தில் அதன் தொடர்பில் இருக்க விரும்புகிறேன். டெலிவிஷன் வர்ணனை செய்கிறேன்.

எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் பல சிறந்த தருணங்கள் இருந்தது. 2018-19-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது எனது சிறந்த சாதனைகளில் ஒன்றாகும். 2010-ம் ஆண்டு நான் டெஸ்டில் அறிமுகம் ஆனேன். இது எனது கிரிக்கெட் பயணத்தின் பெருமைமிக்க தருணங்களில் ஒன்றாகும்.

ராகுல் டிராவிட், டெண்டுல்கர், வி.வி.எஸ். லட்சுமணன், ஷேவாக், கவுதம் காம்பீர் போன்ற வீரர்களின் பெயர்களை நான் இன்னும் நினைவில் வைத்து உள்ளேன். அவர்களை பார்த்து நான் வளர்ந்தேன்.
இவ்வாறு புஜாரா கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *