சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தீவிர அரசியலில் களமிறங்கி இருக்கும் விஜய் நடிக்கும் கடைசி படம் இதுதான் என்று கூறப்படுகிறது. இதனால் படத்துக்கு சினிமா தாண்டி அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வழக்கமான விஜய் படம் போன்று இல்லாமல், இந்த படத்தில் அரசியல் நெடி அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. படத்தில் பஞ்ச் வசனங்களுக்கும் குறைவில்லையாம். அதேபோல விஜய்யின் கட்சி மற்றும் கட்சிக்கொடி பற்றிய சில காட்சிகளும் சேர்க்கப்பட்டிருக்கிறதாம்.
அதேபோல எம்.ஜி.ஆர். புகைப்படங்களும், அவர் தொடர்பான சில காட்சிகளும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அவரது பாடல் வரிகளும் பயன்படுத்தப்பட இருக்கிறதாம்.
சமீப காலமாகவே அரசியல் மேடைகளில் எம்.ஜி.ஆர். பற்றி குறிப்பிட்டு வரும் விஜய், தனது படத்திலும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை இடம்பெற செய்துள்ளது எதிர்பார்ப்பை பற்ற வைத்திருக்கிறது.